செந்தோசாவில் ஷங்ரிலா குழுமத்தின் புதிய பொழுதுபோக்கு வட்டாரமும் புதிய கடற்கரை உல்லாச விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
ஷங்ரிலா குழுமம் நடத்தும் உலகின் ஒரே தனித்த பொழுதுபோக்கு வட்டாரமான ‘பலாவான் @ செந்தோசா’ புதன்கிழமை திறந்தது. அங்கு எட்டு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. ‘ஹைபர்டிரைவ்’ எனும் மூன்று மாடி மின்சார கோ-கார்ட் பந்தயத்தடம், சிறிய குழிப்பந்து திடல் போன்றவை அதில் உள்ளடங்கும்.
பலாவான் கடற்கரையில் 183,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பொழுதுபோக்கு வட்டாரத்தில் இரு புதிய கடற்கரை உல்லாச விடுதிகள் இருக்கும்.
மூன்றாவது உல்லாச விடுதி செப்டம்பர் முதல் தேதி சிலோசோ கடற்கரையில் திறக்கவுள்ளது. டிப்சி கலெக்டிவ் குழுமத்தின் ‘டிப்சி யூனிகார்ன் பீச் கிளப்’, 24,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும். அங்கு பெரிய ஒன்றுகூடல்களும் கொண்டாட்டங்களும் நடத்துவதற்கான வசதிகள் இருக்கும்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, செந்தோசா எல்லா வயதினருக்கும் உகந்த பொழுதுபோக்கு அம்சங்களைப் படிப்படியாகக் கூட்டி வருகிறது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய கடற்கரையில் கடைவீதி திறக்கப்பட்டது. அங்கு வாகனங்களில் உணவு விற்கப்படுகிறது. அதோடு, தென்கிழக்காசியாவின் ஆக உயரமான நீரூற்றும் பகல்நேர இசை நீரூற்றும் அங்கு அமைந்துள்ளன.
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் பலாவான் கடற்கரையில் ‘கிட்சேனியா’ சிறுவர் பூங்கா மீண்டும் திறக்கப்படவிருக்கிறது.
இந்த ஆண்டு, ராஃபிள்ஸ் செந்தோசா உல்லாசத்தளம் செந்தோசாவில் திறக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ரிசார்ட்ஸ் வோர்ல்ட் உல்லாசத்தளத்தை செந்தோசாவின் தென் கடற்கரைகளுடன் இணைக்கும் ஈரடுக்கு நடைபாதை தற்போது கட்டப்பட்டு வருகிறது.
இந்த அரை கிலோமீட்டர் நீள இணைப்புப்பாதை $90 மில்லியன் செலவில் புதுமையான வடிவிலான பூந்தோட்டங்களுடன் கட்டப்படுகிறது.