நீடித்த நிலைத்தன்மையில் பின்தங்கியிருக்கும் நிறுவனங்கள், கரியமிலவாயு வெளியாக்கத்தைக் குறைக்க மற்ற வழிமுறைகளைக் கையாளலாம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
சில நிறுவனங்கள் ஏற்கெனவே புதிய தொழில்நுட்பத்திற்கு மாறியிருந்தாலும், நீடித்த நிலைத்தன்மைக்காக எல்லா நிறுவனங்களும் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என்றார் அவர்.
“எல்லோரும் அதிநூதனத் தொழில்நுட்பமயமாகப் போவதில்லை,” என்று அவர் கூறினார்.
“நீங்கள் புதிய தொழில்நுட்பங்களை நாடாவிட்டாலும், கரியமில வாயு வெளியாக்கத்தைக் குறைப்பதற்குப் பல வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கழிவுகளையும் உங்களுக்குத் தேவைப்படாத சொத்துகளையும் குறைக்கலாம்,” என்றார் திருவாட்டி ஃபூ.
தங்களது வாகனங்கள் சாலையில் பயணம் செய்யும் நேரத்தையும் பயணங்களின் எண்ணிக்கையையும் நிறுவனங்கள் குறைக்கலாம் என்றும் அவர் கூறினார். “இவையெல்லாம் நிறுவனங்கள் எளிதில் செய்யக்கூடியவை.”
புதன்கிழமை நடந்த புளூம்பர்க்கின் நீடித்த நிலைத்தன்மை தொழில் மாநாட்டில் திருவாட்டி ஃபூ கருத்துரைத்தார்.
பருவநிலை மாற்றத்தால் தங்களது தொழில் எவ்வாறு பாதிப்புறும் என்பதை உணர சில நிறுவனங்களுக்குக் கூடுதல் காலமெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருந்தாலும், ஒட்டுமொத்தமாக, தனியார் துறையில் மாற்றம் வேகமடைந்து வருவதாக அவர் கூறினார்.
மாநாட்டின்போது நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பேசிய சிங்கப்பூர் பங்குச்சந்தை குழுமத்தின் தலைமை நிர்வாகி லோ பூன் சாய், பருவநிலை செயல்திட்டத்தில் மேம்பட்ட ஆற்றலை வெளிப்படுத்தும் நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். இத்தகைய நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் நேரடியாக அதிக மூலதனம் ஒதுக்கி வருகின்றனர்.

