சிங்கப்பூரின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் சட்டவிரோத குற்றச் செயல்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் ஐந்து வார காலத்தில் 300க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தினார்கள்.
ஜூன் 16ஆம் தேதிக்கும் ஜூலை 23ஆம் தேதிக்கும் இடையில் அதிகாரிகள் நடத்திய அந்தச் சோதனைகளில் பல்வேறு குற்றங்களை ஒட்டி 1,688 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 1,080 ஆடவர்களும் 608 மாதர்களும் அடங்குவர்.
விசாரிக்கப்பட்டவர்கள் 16 வயது முதல் 82 வயது வரைப்பட்டவர்கள். விசாரிக்கப்பட்ட பதின்ம வயது இளைஞர் செய்ததாகக் கூறப்படும் குற்றச்செயல் எது என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை.
அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்களில் ஆர்ச்சர்ட் பிளாசாவில் செயல்படும் தாய் டிஸ்கோ நடனக் கூடமும் ஒன்றாகும்.
தங்ளின் காவல்துறையினர், உளவு காவல்துறையினர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கு சோதனையிட்டனர்.
அந்த நடனக் கூடத்திலும் இதர இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றிலும் ஜூலை 21ஆம் தேதி ஆடவர் ஒருவரும் நான்கு மாதர்களும் வேதிப்பொருள் ஆவியாக்கிச் சாதனங்களுடன் அதிகாரிகளிடம் சிக்கினர்.
இந்தச் சோதனையை நேரடியாகக் காண ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தாய் நடனக் கூடத்தின் மற்றொரு அறையில் 10க்கும் மேற்பட்ட மாதர்கள் அமர்ந்து இருந்தார்கள். வேலை அனுமதி பற்றி அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த மாதர்கள் வியட்னாம், தைவான், தாய்லாந்து, சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து சில மாதர்கள் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் இரண்டு காவல்துறை வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் காண முடிந்தது.
ஆடவர் ஒருவரும் ஒன்பது பெண்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அன்றிரவு அறிவித்தது.
அதிகாரிகள் ஜூரோங் கேட்வே ரோட்டில் ஜூலை 13ஆம் தேதி நடத்திய சோதனையில் 52,000க்கும் மேற்பட்ட பீர் டப்பிகளும் 780 மதுபான போத்தல்களும் சிக்கின. இதன்தொடர்பில் 46 வயது ஆடவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மெக்பர்சன் ரோட்டுக்கு அருகே உள்ள பர்ன் ரோட்டில் வர்த்தக இடம் ஒன்றில் இணையம் வழி சூதாட்டம் நடப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜாலான் புசார், லிட்டில் இந்தியா, பீச் ரோடு, சைனா டவுன், போட் கீ, சிராங்கூன் ரோடு ஆகியவற்றில் சட்டவிரோத பாலியல் தொழில், சூதாட்டத்தைக் குறிவைத்து அதிகாரிகள் ஜூன் 16 முதல் 18 வரை சோதனை நடத்தினார்கள். மொத்தம் 10 ஆடவர்களும் 65 மாதர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து வார காலம் இடம்பெற்ற சோதனைகளில் 1,900க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். 3,500க்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதிக்கப்பட்டனர். 504 பேர் கைதாயினர்.

