கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில் இருந்து சிங்கப்பூர் வந்த இரு ஸ்கூட் விமானங்களில் பயணிகள் தங்கள் பயணப்பைகளை உடன் எடுத்துவர இயலவில்லை.
கிரீசில் வெப்ப அலைத் தாக்கம் ஏற்பட்டதால் விமானங்களின் செயல்திறன் பாதிப்படைந்ததே அதற்குக் காரணம்.
செவ்வாய்க்கிழமை ஏதென்சில் இருந்து சிங்கப்பூர் வந்த மற்றோர் விமானம் பயணப்பைகளுக்காக எரிபொருளைக் குறைவாக நிரப்பிய நிலையில் கிளம்பியது. வழக்கமாக இடைநில்லாச் சேவை வழங்கும் அந்த விமானம் நடுவழியில் இந்தியாவின் அம்ரித்சர் நகரில் எரிபொருள் நிரப்ப நேரிட்டது.
ஏதென்சில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்குமேல் நிலவுகிறது. இத்தகைய மிக அதிக வெப்பநிலை, விமானம் விண்ணேறத் தேவையான அதன் இயந்திரச் செயல்திறனைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
பயணப்பைகளை உடன் எடுத்துவர இயலாத பயணிகளுக்கு, அவற்றை அவர்களின் வீடுகளுக்கோ ஹோட்டல்களுக்கோ அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஸ்கூட் நிறுவனப் பேச்சாளர் கூறினார்.