‘மனநலம் குறித்த மிகத் தவறான கருத்து போகவில்லை’

4 mins read
5f0c065d-6bb2-4630-afca-4d6c067de32c
எஸ்பிஎச் மீடியா செய்தியாளர்களுடன் நடைபெற்ற அதிபர் ஹலிமாவின் சிறப்பு நேர்காணல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சிங்கப்பூரில் இன்னமும் மனநலம் தொடர்பில் பலரிடையே மிகத் தவறான கருத்து இருப்பதைச் சுட்டினார் சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் ஹலிமா யாக்கோப்.

மனநலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அவர் தமது தவணைக் காலத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அவை உட்பட தமது பதவிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்களைப் பற்றி தமிழ் முரசு, பெரித்தா ஹரியான், சாவ்பாவ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகிய ஊடகங்களுடன் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டார்.

திருவாட்டி ஹலிமாவின் பதவிக் காலத்தில் அதிபர் சவாலில் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளையர்களுக்கு ஆதரவளிக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவற்றின்கீழ் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அதிபர் சவால், மனநலக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு ஒரு திட்டத்தை உருவாக்கியது.

‘பிசி-ஐஎம்எச்’ எனும் அத்திட்டத்தின் வாயிலாக 13லிருந்து 19 வயதுக்கு உட்பட்ட இளையர்களுக்கு உதவுவது இத்திட்டத்தின் இலக்கு. ஆக மோசமான மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகாத இளையர்களுக்கு இது பொருந்தும்.

திட்டத்தின்கீழ் மனநலக் கழகம் நான்கு சமூக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் என்று திருவாட்டி ஹலிமா கூறினார். மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளான இணையர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மனநலக் கழகம் அந்த சமூக அமைப்புகளுக்குப் பயிற்சி வழங்கியதையும் அவர் குறிப்பிட்டார்.

இப்போது பயிற்சி நிறைவடைந்துவிட்டதாகவும் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகள் பாதிக்கப்பட்ட இளையர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் திருவாட்டி ஹலிமா சொன்னார்.

“மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் இளையர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறலாம், மருந்து உட்கொள்ளலாம். எனினும், மீண்டும் சமூகத்தில் இணையும்போது அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தேவைப்படும். அதற்குக் காரணம், அவர்களிடையே மனநலப் பிரச்சினைகளை எழச் செய்த அம்சங்கள் சமூகத்தில் இருந்துகொண்டே இருக்கும். சரியாக அமையாத குடும்பச் சூழல், மனநலனைப் பாதிக்கும் வகையில் இடம்பெறும் தொந்தரவு தரும் நடவடிக்கைகள், சமூக ஊடகங்களின்வழி இடம்பெறும் தொந்தரவு அளிக்கும் செயல்கள், விரிசல்களைக் கொண்ட உறவுகள் போன்ற சிக்கல்கள் உடனடியாகச் சரியாகாது.

“இத்தகைய சூழலில்தான் பாதிக்கப்பட்டோரிடம் பேசவும் அவர்களை வழிநடத்தி உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஒருவர் தேவைப்படுவார்,” என்பதைச் சுட்டினார் திருவாட்டி ஹலிமா. மனநலம் குறித்து மிகத் தவறான கருத்து இருந்து வருவதால் பாதிக்கப்பட்ட எல்லோரும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதையும் அவர் எடுத்துச் சொன்னார்.

“மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் இருக்கும் மிகத் தவறான கருத்து போகவில்லை, அது தொடர்ந்து நிலவி வருகிறது. ஓரளவு மாறி வருகிறது. ஆனால், நாம் விரும்பும் வேகத்தில் மாற்றம் இடம்பெறவில்லை. இன்னமும் தவறான கருத்து இருக்கிறது. மனநல விவகாரங்களைக் கையாளவே அதிபர் சவாலில் அது சார்ந்த முயற்சிகள் எடுக்கப்பட்டன,” என்றார் திருவாட்டி ஹலிமா.

சிறப்புத் தேவையுடையோருக்கு ஆதரவு வழங்கும் முயற்சிகளையும் அதிபர் மேற்கொண்டிருக்கிறார்.

“சிறப்புத் தேவையுடையோைரைப் பொறுத்தவரை குறிப்பாக ஓர் அம்சத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க முற்பட்டேன்; அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். அதற்காகத்தான் அதிபர் சவாலின்கீழ் சிறப்புத் தேவையுடையோர் மேம்பாட்டுத் திட்டத்தை (எம்பவரிங் பீப்பல் வித் டிசபிலிட்டீஸ்) திட்டத்தைத் தொடங்கினோம். அதன் மூலம் வேலை வாய்ப்புப் பற்றுறுதி இயக்கத்தில் (எனேபலிங் எம்பிளாய்மெண்ட் பிளட்ஜ்) சேர்ந்துகொள்ளுமாறு நிறுவனங்களை ஊக்குவிப்போம்.

“சுமார் 28 நிறுவனங்கள் இதில் சேர்ந்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால் அனைவரையும் உள்ளடக்கும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கவும் வேலையிடங்களை மறுசீரமைத்து சிறப்புத் தேவையுடையோருக்குப் பயிற்சிகளை வழங்கவும் வேலை வாய்ப்புப் பற்றுறுதி இயக்கம் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது,” என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.

அம்முயற்சி மிகச் சிறப்பாகக் கைகூடியதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் தொடர்பில் அதிபர் சவால், பல சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதையும் அவர் குறிப்பிட்டார்.

போதிய வசதி இல்லாத குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி வழங்கும் நோக்குடனும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“2018ஆம் ஆண்டில் அதிபர் சவாலின்கீழ், அதிபர் சவால் வாழ்வுக்கு ஆற்றலளிக்கும் நிதி (பிரெசிடண்ட்ஸ் சேலஞ் எம்பவரிங் ஃபோர் லைஃப் ஃபண்ட்) தொடங்கப்பட்டது. ஆதரவளிப்பதையும் தாண்டி ஆற்றலை மேம்படுத்த முற்பட்டோம். வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி, குறிப்பிட்ட அம்சங்களை மையமாகக் கொண்டு சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு அந்த முயற்சியில் இறங்கினோம்.

“உதாரணமாக, நாங்கள் இணைந்து பணியாற்றிய சமூக சேவை அமைப்புகளில் ஒன்று ஒற்றைத் தாயார்களுக்கு உதவி வருகிறது. அந்த அமைப்பு குறிப்பாக அப்பிரிவினரைக் (ஒற்றைத் தாய்மார்) கருத்தில்கொண்டு செயல்பட்டு அவர்களுக்கான வழிகாட்டிகளை வழங்கும், அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களை அடையாளம் காணும், அவர்களுக்குப் பயிற்சி வழங்கும்,” என்று திருவாட்டி ஹலிமா விவரித்தார்.

சமூகம் ஆற்றவேண்டிய பங்கின் முக்கியத்துவத்தையும் அவர் முன்வைத்தார்.

“மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளான ஒருவர், பெரிய அளவிலான சிறப்புத் தேவையுடைய ஒருவரைக் கவனிக்கச் சிரமப்படும் ஒருவர், பிள்ளைகளைக் கட்டிக்காக்கச் சிரமப்படும் ஓர் ஒற்றைத் தாயார் ஆகியோரை நாம் சந்தித்திருப்போம். அதனால் நமக்குப் பரந்த மனப்பான்மை இருப்பது அவசியம். நாம் ஆதரவளிக்கவேண்டும், எப்படி உதவுவது என்பதைச் சிந்திக்கவேண்டும். சமூகத்தில் பல திட்டங்கள் உள்ளன. எனினும், இது அந்த திட்டங்களுக்கும் சேவைகளுக்கும் அப்பாற்பட்டது. நமது மனப்போக்கையும் பாதிக்கப்பட்டோரை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதையும் பொறுத்தது. இவை மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன்,” என்றார் அதிபர் ஹலிமா.

குறிப்புச் சொற்கள்