திரு விபுல் சாவ்லா 2022ல் ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகியாகச் சேர்ந்தபோது, ஃபேர்பிரைஸ் பேரங்காடி ஒன்றில் வலம்வந்து வயதான வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசியதே அவர் செய்த முதல் காரியங்களில் ஒன்று.
அன்று புதன்கிழமை, வாடிக்கையாளர் முட்டை வாங்க வந்திருப்பதைத் திரு விபுல் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
மூத்த குடிமக்களுக்கு புதன்கிழமைகளில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். முட்டை, மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைச் சமாளிக்க இந்தத் தள்ளுபடி உதவுகிறது.
சிங்கப்பூரின் பணவீக்கம் இவ்வாண்டு 2.5 முதல் 3 விழுக்காடு வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்காக நியாயமான விலைகளைக் கட்டிக்காக்கும் கொள்கையை நிலைநாட்ட திரு விபுல் ஓர் உத்தியை வகுத்தார்.
ஃபேர்பிரைஸ் வர்த்தக சின்னமிட்ட பொருள்களை விரிவுபடுத்த கூடுதல் வளங்களை ஒதுக்குவதே அந்த உத்தி. இதன்வழி, வாடிக்கையாளர்களுக்கு மற்ற வர்த்தக சின்னங்களைவிடக் குறைவான விலையில் அதிகமாகத் தேவைப்படும் பொருள்களை ஃபேர்பிரைஸ் தயாரிக்கும்.
“வாடிக்கையாளர்கள் தங்களது வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் எங்கள் சமூகக் கொள்கைக்கு ‘சொந்த வர்த்தக சின்னம், உணவுத் தயாரிப்பு’ (OBFS) அடிப்படையாக விளங்குகிறது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் திரு விபுல் கூறினார்.
சொந்த வர்த்தகச் சின்னத் தயாரிப்புகளுடன், பொருள்களின் மூலம், தரம், விளம்பரம், தயாரிப்புச் செலவு ஆகியவற்றில் ஃபேர்பிரைஸ் அதிக கட்டுப்பாட்டைத் தக்கவைத்திருக்கும்.
இதன்வழி, பணவீக்கத்திற்குக் குறைவான விலைகளில் தரமான அத்தியாவசியப் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இயல்வதாக OBFS தலைமை நிர்வாகி கிரேஸ் சுவா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கட்டுப்படியாகும் விலையில் தரமான உணவுப் பொருள்களை வழங்கும் பேரங்காடியாக ஃபேர்பிரைஸ் திகழ்வதற்கு உதவியாக 2019ல் OBFS அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஃபேர்பிரைஸ், பசார் வர்த்தக சின்னமிட்ட பொருள்களுடன் தொடங்கிய OBFS, இப்போது 12 வர்த்தக சின்னங்களுடன் விரிவடைந்துள்ளது. இவற்றின் விலை மற்ற வர்த்தக சின்னங்களைவிட 10 முதல் 15 விழுக்காடு குறைவு.
தற்போது 54 பிரிவுகளில் 2,000 பொருள்களை OBFS வழங்குகிறது. ஹார்வஸ்ட் ஃபீல்ட்ஸ், ஒரிஜின்ஸ் உணவு வர்த்தக சின்னங்கள், லைஃப் பானங்கள், ஜஸ்ட் ஒயின் போன்றவை அவற்றுள் அடங்கும்.
தற்போது, பேரங்காடியில் பொருள் வாங்குவோரில் மூவரில் ஒருவரின் கூடையில் ஃபேர்பிரைஸ் வர்த்தக சின்னமிட்ட ஒரு பொருள் இருக்கிறது. இணையம்வழி வாங்குவோரில் பத்தில் எழுவரின் கூடைகளில் ஃபேர்பிரைஸ் தயாரிப்புகள் உள்ளன.
இருந்தாலும், ஃபேர்பிரைஸ் விற்பனையாகும் பொருள்களில் OBFS தயாரிப்பு 15 விழுக்காடுதான். உலகப் பேரங்காடிகளில் சராசரியாக 30 விழுக்காடு சொந்த வர்த்தக சின்னமிட்ட பொருள்கள் இருக்கின்றன.
எனவே, சொந்தத் தயாரிப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று திருவாட்டி சுவா கூறினார். தேவை அதிகரிப்பதால், OBFS வருமானம் தற்போதைய $500 மில்லியனிலிருந்து 2030ஆம் ஆண்டுக்குள் $1 பில்லியனை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூடுதல் வருமானம், உயர் செலவுகளின்போது ஃபேர்பிரைஸ் தொழிலுக்கு ஆதரவளிக்கும் என்று திரு விபுல் கூறினார்.
மலேசியா 2022 ஜூன் மாதம் சிங்கப்பூருக்குக் கோழி ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
“முன்னெச்சரிக்கை ஏதுமில்லை, இருந்தாலும் பேரங்காடி அடுக்குகள் நிறைந்திருந்தன, கோழி விலையும் மாறவில்லை. நாங்கள் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து வேகமாகக் கோழிகளைத் தருவித்தோம். ஆகச்சிறந்த விலைகளைப் பேரம்பேச நேரமில்லை. அதனால் குறுகிய காலத்திற்கு கோழி விற்பனையில் நட்டம் ஏற்பட்டது,” என்றார் திரு விபுல்.

