வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளலாம் என்று மேலும் எட்டு பள்ளிப் பேருந்து நடத்துநர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
ஓட்டுநர்கள் இல்லாததால் பள்ளிப் பேருந்து நடத்துநர்கள் சேவையைத் தொடர முடியாமல் திணறி வந்தனர்.
இந்த நிலையில் முதல் தொகுதியாக ஆறு பேருந்து நடத்துநர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த கல்வி அமைச்சு அனுமதியளித்தது. தற்போது மேலும் எட்டுப் பேருந்து நடத்துநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்தம் 14 பேருந்து நடத்துநர்கள் அனுமதி பெற்றுள்ளனர் என்று திங்கள்கிழமை கல்வி அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் பள்ளிப் பேருந்துகளுக்கான ஓட்டுநர் நெருக்கடியைச் சமாளிக்க சில நடவடிக்கைகளை கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு வழி பிறந்துள்ளது.
ஒரே ஒரு பள்ளிக்குச் சேவை வழங்கும் பள்ளிப் பேருந்து நடத்துநர்களும் அதிக வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் சேர்க்க அனுமதிப்பது குறித்து பள்ளிப் பேருந்து சங்கத்திடம் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியது. இதற்கு முன்பு குறைந்தது இரண்டு பள்ளிகளுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டன.

