மியன்மார் பணிப்பெண் மரணமடைத்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் காவல்துறை அதிகாரி கெவின் செல்வம், 44, மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசுத்தரப்பு வழக்கறிஞர் சாட்சியங்களைச் சேகரிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டுக்கொண்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மியன்மார் பணிப்பெண் பியாங் காய் டான், 24, மரணமடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் செல்வத்தின் நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களை அரசுத் தரப்பு திரட்ட முயல்வதாகக் கூறப்பட்டது.
வழக்கு அக்டோபர் 18ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
செல்வத்திடம் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த பியாங், 2016 ஜூலை 16ஆம் தேதி மாண்டார். பியாங் அவரது முதலாளிகளால் துன்புறுத்தப்பட்டார்.
பியாங் இறந்தபோது அவரது எடை 24 கிலோவாக இருந்தது. அதற்கு முந்திய ஆண்டு பியாங் 39 கிலோ எடையுடன் இருந்தார்.
செல்வம் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செல்வத்தின் முன்னாள் மனைவி காயத்திரி முருகையன், 44, மீதான குற்றம் 2021ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பணிப்பெண்ணைத் துன்புறுத்திய காயத்திரியின் தாயாரான 64 வயது பிரேமாவிற்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

