சிராங்கூன் ரோடு லிட்டில் இந்தியா ஆர்கேடில் உள்ள நாணய மாற்று வணிகரை தந்திரமாக ஏமாற்றி 130,000 வெள்ளிக்கு மேல் திருடியதாக இருவர் மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
2022 டிசம்பர் 2ஆம் தேதி மாலை 4 மணியளவில் மோனிஷா எக்சேஞ்ச் என்ற நாணய மாற்றுக் கடையில் ஜார்ஜியன்ஸ் அப்ராலாவா லராக்லி, 36, டார்சானியா டமாஸி, 70 ஆகிய இருவரும் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
சம்பவத்தன்று இருவரும் யூரோ, அமெரிக்க டாலர் நோட்டுக்களை சிங்கப்பூர் வெள்ளியாக மாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒருவர், வெளிநாட்டு நோட்டுக்களை பூட்டுப்போட்ட பையில் வைத்துக் கொடுத்துள்ளார். பின்னர் வருவதாகக் கூறி இருவரும் அந்தப் பையை நாணய மாற்றுக்காரரிடம் விட்டுச்சென்றனர்.
திரும்பி வந்த இருவரும் நாணய மாற்றுக்காரரிடம் பையில் உள்ள வெளிநாட்டுப் பணத்தை சரிபார்க்க சொல்லியிருக்கின்றனர்.
“அப்போது சாமர்த்தியமாக உண்மையான நோட்டுகளுக்குப் பதிலாக போலி நோட்டுகளை அவர்கள் வைத்துவிட்டனர்,” என்று காவல்துறை தெரிவித்தது.
பின்னர் வருவதாகக் கூறி பையை விட்டுச் சென்ற இருவரும் திரும்பவே இல்லை.
இதனால் பையில் இருந்த பணத்தை நாணய மாற்றுக்காரர் எடுத்துப் பார்த்தபோது 200, 500 யூரோ நோட்டுகள், 100 அமெரிக்க டாலர் நோட்டுகளைத் தவிர மற்றவை போலி நோட்டுக்களாக இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
நாணய மாற்றுக்காரர் அதே நாள் எட்டு மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
மத்திய காவல்துறைப் பிரிவினர், சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த படக்கருவிகளில் பதிவான காட்சிகளை பல மணி நேரம் ஆராய்ந்ததில் சந்தேக நபர்களின் அடையாளம் தெரிய வந்தது.
ஆனால் மறுநாள் டிசம்பர் 3ஆம் தேதி இருவரும் மலேசியா சென்றுவிட்டனர். இதையடுத்து அரசு நீதிமன்றங்கள் அவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. இதையடுத்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்த இருவரையும் மலேசிய காவல்துறை கைது செய்து மறுநாள் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்தது.
டமாஸி, லராக்லி ஆகிய இருவருக்கும் எதிரான இந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.