‘சீனாவின் பிரசாரங்களை சாவ் பாவ் எதிரொலிப்பதாகக் கூறுவது தவறு’

2 mins read
6a4a3b0d-5910-4ef8-9361-c5f64a46375b
வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான கட்டுரை கூறுவதை சாவ் பாவ் நிராகரித்து இருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சீன மொழி ஊடகமான சாவ் பாவ், சீனாவின் பிரசாரங்களையும் பொய்களையும் எதிரொலிக்கிறது என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி குறைகூறி இருப்பதை சிங்கப்பூர் அரசாங்கம் வலுவாக மறுத்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டில் ‘சிங்கப்பூரில் பெய்ஜிங் நிலைப்பாடுகள் வலுவாக எதிரொலிக்கப்படுவதால் கவலை’ என்ற தலைப்பில் ஜூலை 24ஆம் தேதி வெளியான கட்டுரை, சீனாவின் ஊதுகுழலாக சாவ் பாவ் நாளிதழ் செயல்படுவதாக தவறான முறையில் குறிப்பிடுகிறது என்று அமெரிக்காவுக்கான சிங்கப்பூரின் தூதர் லுயி டக் இயூ தெரிவித்தார்.

சாவ் பாவ் உள்ளிட்ட சிங்கப்பூரின் முக்கியமான ஊடகங்கள், சிங்கப்பூருக்கே உரிய அக்கறைக்குரிய சமூக அம்சங்களையும் கலாசார வரலாற்றையும் கண்ணோட்டங்களையும் பிரதிபலிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அவை சிங்கப்பூரர்களுக்கு உள்ளூர் செய்திகளையும் உலகச் செய்திகளையும் தெரியப்படுத்துகின்றன.

சிங்கப்பூரின் பல கலாசார சமூகங்களின் குரல்களைக் கட்டிக்காப்பதில் அவை மிக முக்கிய பணியாற்றுகின்றன என்று திரு லுயி ஜூலை 26ஆம் தேதி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அந்தக் கடிதம் வாஷிங்டனில் செயல்படும் அமெரிக்காவிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகத்தின் இணையத்தளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

தான் சீனாவுக்கான சிங்கப்பூரின் தூதராக ஏற்கெனவே பணியாற்றி இருப்பதாகக் குறிப்பிட்ட திரு லுயி, அந்தச் செய்தித்தாள் சமநிலையில் செய்திகளை வெளியிடுகிறது; சிங்கப்பூரர்களுக்கே உரிய சீரிய கண்ணோட்டங்களில் அது செய்திகளைத் தருகிறது என்று பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சாவ் பாவ் வாசகர்கள் கூறுவதைத் தான் அடிக்கடி கேட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆகையால், வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் தவறான முறையில் தான் சித்திரிக்கப்பட்டு இருப்பதை சாவ் பாவ் திட்டவட்டமாக நிராகரித்து இருப்பது தனக்கு எந்த வியப்பையும் தரவில்லை என்று திரு லுயி கூறினார்.

குறிப்புச் சொற்கள்