அலட்சியம், இடர்பாடுகளைக் கட்டுப்படுத்த தவறுதலே வேலையிட மரணங்களுக்கு காரணம்: மனிதவள அமைச்சு

2 mins read
174329e6-b05f-4b3b-af13-b16e90093c9e
இவ்வாண்டில் மட்டும் இதுவரை 16 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 46 ஆக இருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அண்மையில் நிகழ்ந்த வேலையிட மரணங்களுக்குத் தனிநபர் அலட்சியம், இடர்பாடுகளைக் கட்டுப்படுத்த தவறுதல் ஆகியவை காரணங்களாக இருப்பதாக மனிதவள அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.

வேலையிடங்களில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டது.

கவனக்குறைவாக நடந்துகொள்ளும் நிறுவனங்கள் மீதும் தனிநபர்கள் மீதும் நடவடிக்கை  எடுக்க தயங்கமாட்டோம் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது. 

ஃபேஸ்புக் பதிவு மூலம் தகவல் வெளியிட்ட அமைச்சு, ஜூன் 15ஆம் தேதி தஞ்சோங் பகார் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட விபத்தையும், ஜூலை 10ஆம் தேதி ஜூரோங் வெஸ்ட் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தையும் சுட்டிக்காட்டியது.

“தஞ்சோங் பகார் கட்டுமானத் தளத்தில் கட்டடங்களை இடிக்கும்போது இடர்பாடுகளைக் கட்டுப்படுத்தத் தவறியதால் சுவர் இடிந்து விழுந்ததில் 20 வயது இந்திய ஊழியர் மரணமடைந்தார். ஜூரோங் வெஸ்ட் கட்டுமானத் தளத்தில் பின்நோக்கி வந்த கனரக வாகனம் ஒன்று  33 வயது இந்திய ஓட்டுநர் மீது மோதியது. அதில் அவர் மாண்டார்.”

இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு விதிமுறைகளும் வேலையிடச் சூழலையும்  சரியாக வைத்திருந்தால் மரணங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. 

இவ்வாண்டில் மட்டும் இதுவரை 16 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 46 ஆக இருந்தது. 2016ஆம் ஆண்டு ஆக அதிகமாக 66 வேலையிட மரணங்கள் பதிவாகின. 

வேலையிட மரணங்களைக் குறைக்கும் விதமாக 2022ஆம் ஜூன் மாதம் மனிதவள அமைச்சு புதிய அமலாக்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. 

அதில் வேலையிடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத ஒவ்வொருமுறையும் 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

ஊழியர்களுக்கு பெரும் காயங்கள் ஏற்பட்டால் கட்டுமானத் தளத்தில் வேலைகள் நிறுத்தப்படும்,  வேலையிடப் பாதுகாப்புக் குறித்து வெளிப்புறத் தணிக்கையாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். 

வேலையிடத்தில்  மரணங்கள் நிகழ்ந்தால் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். 

பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக உள்ளதா என்பதைக் கண்டறிய அமைச்சு அவ்வப்போது கட்டுமானத் தளங்களில் சோதனைகள் நடத்தும் என்றும் கூறியது. 

 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலையிட மரணங்களைக் குறைக்கும் நோக்கில் கட்டுமானத் தளங்களில் ஆறு மாத காலம் பாதுகாப்பு நிலை உச்சக்கட்டத்தில் இருக்க அமைச்சு உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு  2023ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியுடன் முடிவடைய வேண்டியது. ஆனால் அது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்