வீட்டில் நடமாடும் உள்நோயாளி பராமரிப்பு (Mobile Inpatient Care at Home) என்பது முன்னோடித் திட்டத்தின் பெயர். இது, சுருக்கமாக ‘மைக்@ ஹோம்’ என்று அழைக்கப்படுகிறது.
சாங்கி பொது மருத்துவமனை, கேகே பெண்கள், சிறார் மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை ஆகியவை இச்சேவையை வழங்கி வருவதாக சுகாதாரப் பராமரிப்பு உருமாற்றத்திற்கான சுகாதார அலுவலகம் (எம்ஓஎச்டி) திங்கட்கிழமை தெரிவித்தது.
அதாவது, மனநல மருத்துவமனையைத் தவிர (ஐஎம்எச்) சிங்கப்பூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் ‘மைக்@ஹோம்’ சேவையை வழங்க முடியும்.
ஐஎம்எச், தனது நோயாளிகளுக்கு இதுபோன்ற சேவைகள் வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முன்னோடித் திட்டம் முடிவுக்கு வரும்போது 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வீட்டிலேயே மெய்நிகர் வார்டு சேவை அனுபவத்தைப் பெறுபவர்களாக இருப்பர்.
எதிர்காலத்தில் இத்திட்டம் பிரதான திட்டமாக உருவெடுக்கும் என்று எம்ஓஎச்டி உதவி இயக்குநர் லாய் யி ஃபெங் இணையம் வழி நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மெய்நிகர் வார்டு மூலம் நோயாளிகளுக்கு 24 மணிநேரம் மருத்துவ பராமப்புச் சேவை வழங்கப்படும். சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களை உள்ளடக்கிய குழு வீட்டுக்கு வருகையளித்தும் தொலைத் தொடர்பு மூலமும் பராமரிப்புச் சேவைகளை வழங்கும். இது, நோயாளிகள் குணமடைந்து விடுவிக்கப்படும் வரை தொடரும். ஒருவேளை நோயாளியின் நிலைமை மோசமடைந்தால் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படுவார் என்று எம்ஓஎஎச்டி மேலும் தெரிவித்தது.
கடந்த 2022ஆம் ஆண்டில் தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் கட்டமைப்பு, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, ஈசூன் ஹெல்த் ஆகியவை முன்னோடித் திட்டத்தை தொடங்கியிருந்தன. ஆனால் அப்போது தோல் தொற்றுப் பிரச்சினை, சிறுநீர்ப் பாதைத் தொற்று, அதிக திரவத்தினால் இதய செயலிழப்பு போன்ற பொதுவான மருத்துவ சிகிச்சை என்று வகைப்படுத்தப்பட்ட நோய்களுக்கு மட்டுமே மெய்நிகர் வார்டு சேவை வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது டெங்கி காய்ச்சல், தோல் நோய்த்தொற்று, தோல் அரிப்பு, சிறுநீர்ப் பாதைத் தொற்று, மாதர் நோய் உள்ளிட்ட பலவகையான பொதுவான நோய்களுக்கு வீட்டிலேயே நோயாளிகளுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.