அப்பர் சாங்கி சாலையில் வாகனம் ஒன்றில் 34 வயது ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. திங்கட்கிழமையன்று அச்சடலம் மீட்கப்பட்டது.
அந்த ஆடவர் சில நாள்களுக்கு முன்பு மாண்டதாகக் கருதப்படுகிறது. சன்பர்ட் சாலையில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையினர் கூறினர்.
கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே சடலம் வாகனத்தில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. அப்பர் சாங்கி சாலையில் உள்ள அப்போலோ கார்டன்ஸ் அடுக்குமாடி வீட்டுக் கட்டடத்துக்கு அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் இருந்தது.
முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் சூது எதுவும் இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என்று காவல்துறை சொன்னது.
வாகனத்தின் வலது புறம் உள்ள கதவிலிருந்து பழுப்பு நிற திரவம் கசிந்தது காணப்பட்டது. குடியிருப்பாளர் ஒருவர் எடுத்த படங்களில் அது தெரிந்தது.