‘சிஎம்பிபி’ அதிகாரியைத் தாக்கிய மாது

‘சிஎம்பிபி’ அதிகாரியைத் தாக்கிய மாது

2 mins read
df1f4866-a77f-4bb7-b2d6-6290f4ced01f
குற்றவாளியான கே. சாந்தி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய ஆள்பலத் தளத்தைச் (சிஎம்பிபி) சேர்ந்த அதிகாரிகளை ஒரு மாது தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கே. சாந்தி ஏ. கிருஷ்ணசாமி என்ற மாதின் மகன் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியன்று தேசிய சேவைக்குச் செல்லாதிருந்தார். அதனால் மூன்று ‘சிஎம்பிபி’ அதிகாரிகள் கே. சாந்தியின் வீட்டுக்குச் சென்றனர்.

மூன்று நாள்களுக்குப் பிறகு சிஎம்பிபிக்கு வருமாறு அவர்கள் மகனுக்கு உத்தரவு பிறப்பித்தனர். தேசிய சேவை ஆட்சேர்ப்புச் சட்டத்தின்கீழ் (என்லிஸ்ட்மெண்ட் ஆக்ட்) குற்றம் இழைக்கப்பட்டதன் தொடர்பில் விசாரணையில் ஒத்துழைப்பதற்காக அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உத்தரவை மீட்டுக்கொள்ளுமாறு கே. சாந்தி வற்புறுத்தியிருக்கிறார். சிஎம்பிபி அதிகாரிகளில் ஒருவரின் கையை சாந்தி வலுக்கட்டாயமாகப் பற்றியிருக்கிறார்.

அந்த அதிகாரியின் கையிலும் தோளிலும் காயங்கள் ஏற்பட்டன. தோளில் ஏற்பட்ட காயத்துக்கு அவர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேண்டுமென்றே அரசாங்க ஊழியருக்குக் காயம் விளைவித்ததன் தொடர்பிலும் அரசாங்க ஊழியருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் 58 வயது கே. சாந்திமீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குற்றச்சாட்டுகளுக்கு அவர் விசாரணை கோரினார்.

சென்ற ஜூலை மாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. தீர்ப்புக்காக அவர் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

நான்கு மாதங்கள் ஒரு வாரம், ஆறு மாதங்கள் இரண்டு வாரங்கள் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்துக்கு கே. சாந்திக்கு சிறைத் தண்டனை விதிக்குமாறு துணை அரசாங்க வழக்கறிஞர் கொலின் இங் கேட்டுக்கொண்டார்.

2021ஆம் ஆண்டில் அனுமதியின்றி மூன்று முறை புக்கிட் கோம்பாக் ராணுவ முகாமுக்குள் நுழைந்தது உள்ளிட்டவற்றின் தொடர்பில் மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளும் கே. சாந்திமீது சுமத்தப்பட்டிருந்தன. நீதிமன்ற விசாரணையின்போது அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

குற்றச்சாட்டுகளின் தொடர்பில் முடிவெடுக்க தனக்குக் கூடுதல் கால அவகாசம் தேவை என்று கே. சாந்தி கூறினார். அதனால் தீர்ப்பு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்