ஞாயிறு வானில் விண்கற்கள் தீட்டும் வண்ணக் கோலம்

2 mins read
1b3245a0-e7eb-44fe-b97d-84c36e1bf425
ஆகஸ்ட் 13ஆம் தேதி விண்கற்கள் வானில் தீட்டும் வண்ணக் கோலத்தைக் காணும் வாய்ப்பு ஆர்வலர்களுக்குக் கிட்டக்கூடும். - படம்: இணையம்

சிறியவர் முதல் பெரியவர் வரை, சிங்கப்பூரின் தேசிய தினத்தில் இடம்பெறும் வாணவேடிக்கைகளைக் காண்பது மகிழ்ச்சிக்குரிய அம்சம் என்றால் அது மிகையில்லை.

புதன்கிழமை அதைத் தவறவிட்டவர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை வேறு வகையான வண்ணக் கோலத்தை வானில் பார்க்கும் வாய்ப்பு கிட்டக்கூடும்.

வானிலை சரியாக இருப்பின், ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் கண்களுக்கு அந்த விருந்து கிடைக்கும்.

அந்நேரத்தில் ‘பெர்செய்ட்ஸ் விண்கல் மழை’ எனப்படும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதைக் கண்டு களிக்க எந்தச் சிறப்புக் கருவியும் தேவையில்லை.

உலகின் ஆகப் பெரிய விண்கல் மழையாக ‘பெர்செய்ட்ஸ் விண்கல் மழை’ கருதப்படுகிறது. அறிவியல் நிலையக் காணகம் அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

‘ஸ்விஃப்ட் டட்டில்’ எனும் மிகப் பெரிய வால் நட்சத்திரம் 1862ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வால் நட்சத்திரம் வானில் விட்டுள்ள விண்வெளிக் குப்பைக்குள் பூமி செல்லும்போது ‘பெர்செய்ட்ஸ் விண்கல் மழை’ நிகழ்வு ஏற்படுகிறது.

இதற்கு முன்னர், 1992ஆம் ஆண்டு இந்நிகழ்வு ஏற்பட்டது.

வழக்கமாக ஜூலை மாத மத்திக்கும் ஆகஸ்ட் மாதப் பிற்பகுதிக்கும் இடையில் ‘பெர்செய்ட்ஸ் விண்கல் மழை’ ஏற்படும். இந்த ஆண்டு நிலா 10 விழுக்காட்டு ஒளியுடன் மட்டுமே காணப்படும் நேரத்தில் இந்த நிகழ்வு ஏற்படவிருப்பதால் வழக்கத்தைவிட வண்ணமயமாகக் காட்சியளிக்கும் என்று கருதப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 13ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அதிகமான விண்கற்களைப் பார்க்க உகந்த நேரம். மேகங்கள் மறைக்காவிட்டால் சாதாரணக் கண்களுக்கே அவை புலப்படும்.

பூங்காக்கள், கடற்கரைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் போன்ற வெட்டவெளி நிறைந்த இடங்களில் இருந்து இந்த ‘பெர்செய்ட்ஸ் விண்கல் மழையைக்’ காணலாம்.

இதையடுத்து டிசம்பரில் ‘ஜெமினைட்ஸ் விண்கல் மழையை’ சிங்கப்பூர் வானில் காணலாம். அது ஆகப் பெரிய விண்கல் மழை என்று அறிவியல் நிலையக் காணகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்