சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 4,000 இந்தோனீசிய இளையர்கள்

2 mins read
970c4aa9-27ab-4e3f-9e91-5dadbc272c5d
மூன்றாண்டு காலத்தில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. - படம்: சாவ்பாவ்

கடந்த சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4,000 இளம் இந்தோனீசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வழங்கப்படும் உபகாரச் சம்பளத் திட்டங்களும் இங்குள்ள நல்ல வேலை வாய்ப்புகளும் அதற்கான காரணங்கள்.

2045ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக உருவெடுப்பது இந்தோனீசியாவின் இலக்கு. இவ்வேளையில் பல திறனாளர்கள் வெளியேறுவது அந்த இலக்குக்கு இடையூறாக அமையலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 3,912 இந்தோனீசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றதாக இந்தோனீசியக் குடிநுழைவு அலுவலகம் தெரிவித்தது. அவர்களில் பெரும்பாலோர் 25லிருந்து 35 வயதுக்கு உட்பட்ட இளம் பட்டதாரிகள் என்றும் அலுவலகம் குறிப்பிட்டது.

குறிப்பாக நல்ல வேலை வாய்ப்புகளுக்காகவும் மேம்பட்ட வாழ்க்கைமுறைக்காகவும் குடியுரிமையை மாற்றிக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமை; அதே வேளையில் இந்தப் போக்கை இந்தோனீசிய அரசாங்கம் கவனிக்கவேண்டும் என்று அந்நாட்டின் குடிநுழைவு தலைமை இயக்குநர் சில்மி கரீம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற இளையர் நிகழ்ச்சியில் திரு சில்மி இந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த திறனாளர்களை அடையாளம் காண இந்தோனீசியாவுக்குப் போதுமான கால அவகாசம் இல்லை என்பதை அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இந்தோனீசியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதிகம் பங்காற்றக்கூடிய பருவத்தில் இருக்கும் பலர் இந்தோனீசியக் குடியுரிமையைக் கைவிட்டது குறிப்பிடத்தக்கது என்றும் மெட்ரோ டிவி தொலைக்காட்சியுடன் நடைபெற்ற நேர்காணலில் திரு சில்மி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்