பாலர்பள்ளியில் சிறுவர்களைத் துன்புறுத்தியதாக மாது மீது குற்றச்சாட்டு

பாலர்பள்ளியில் சிறுவர்களைத் துன்புறுத்தியதாக மாது மீது குற்றச்சாட்டு

2 mins read
a8135264-6a83-4b61-b38b-ae7ab3d90a18
படம்: - பிக்சாபே

பாலர்பள்ளி ஒன்றில் இரு பாலர்களை இருட்டு அறையில் அல்லது மேசைக்குப் பின்னால் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக மாது ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒரு தருணத்தின்போது அந்தப் பாலர்களில் ஒருவர் துன்புறுத்தப்படுவதற்கு அனுமதித்ததாக மற்றொரு மாது மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த இரு பாலர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த இரு மாதர்கள் மற்றும் அப்பள்ளியின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தின்கீழ், தம் பராமரிப்பின்கீழ் இருந்த இரு பாலர்களைத் துன்புறுத்தியதாக ஆகஸ்ட் 3ஆம் தேதி அந்த 28 வயது மாதின்மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி ஏறக்குறைய 15 நிமிடங்களுக்கு அப்பள்ளியில் மேசைக்கு அடியில் இரண்டு வயதுச் சிறுவனை அடைத்து வைத்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் இருட்டு அறையில் ஆறேழு நிமிடங்களுக்கு அச்சிறுவனை அந்த மாது அடைத்து வைத்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நாளில், ஒரு வயதும் எட்டு மாதமும் நிரம்பிய குழந்தையின் முகத்தில் அந்த மாது விரலால் குத்தியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அச்சிறுமியின் கன்னத்தில் அறைந்து அந்த மாது அவரைத் தரையில் பலமுறை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அவ்விரு பாலர்களை அந்த மாது மறுபடியும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த இரண்டு வயதுச் சிறுவன் அமர்ந்திருந்த நாற்காலியை அந்த மாது இழுத்ததால் அச்சிறுவன் தரையில் விழ நேரிட்டதாகக் கூறப்படுகிறது. அச்சிறுவனைத் தூக்கி நாற்காலியில் அமரவைத்த அந்த மாது, அங்கிருந்த மேசைக்குள் தள்ளியதாகச் சொல்லப்படுகிறது.

அந்த மாது மீது குற்றஞ்சாட்டப்பட்டபோது அவர் ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருந்ததாக அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டாமவர், துன்புறுத்தப்படுவதிலிருந்து அச்சிறுமியைப் பாதுகாக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அச்சிறுமி பிளாஸ்டிக் பொருளால் அடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அந்த மாதர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தின்கீழ், சிறுவர்களைக் கொடுமைப்படுத்திய அல்லது கொடுமைப்படுத்தப்பட அனுமதித்த குற்றம் ஒவ்வொன்றுக்கும் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $8,000 வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்