அதிபராவதற்கான முயற்சியைத் தொடங்கினார் என்டியுசி முன்னாள் தலைமை நிர்வாகி

அதிபராவதற்கான முயற்சியைத் தொடங்கினார் என்டியுசி முன்னாள் தலைமை நிர்வாகி

3 mins read
71c1c216-5e07-47fd-a22b-00bd82df16ef
‘நம்பிக்கையை மீண்டும் கொணர்வோம், நமக்கு நன்னம்பிக்கை அளிப்போம்’ என்ற கருப்பொருளுடன் கோப்தோம் கிங் ஹோட்டலில் திரு டான் கின் லியன் அதிபராகும்  முயற்சியைத் தொடங்கினார். - படம்; ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அதிபராக விரும்பும் என்டியுசி முன்னாள் தலைமை நிர்வாகியான திரு டான் கிம் லியன், 75, அதற்கான முயற்சியைத் தொடங்கினார்.

‘நம்பிக்கையை மீண்டும் கொணர்வோம், நமக்கு நன்னம்பிக்கை அளிப்போம்’ என்ற கருப்பொருளுடன் கோப்தோர்ன் கிங் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை அவரின் முயற்சி தொடங்கியது.

அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால், அதிபரின் முக்கியமான இரண்டு கடமைகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக பணியாற்றப்போவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் சேமிப்பைப் பயன்படுத்துவது, முதலீடு செய்வது அவற்றில் ஒன்று.

அரசாங்கச் சேவையில் உயர்பொறுப்புகளுகான பரிந்துரைகளை அங்கீகரிப்பது மற்றொன்று என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கடமைகளுக்கு அப்பாலும் சிங்கப்பூர் மக்களுக்கு இன்னும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித் தரக்கூடிய கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தும் வகையில் அதிபர் செயல்பட வேண்டும் என்பது தனது இலக்காக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரு டான் ஜீ சே என்பவர் அதிபர் வேட்பாளராகத் தம்மை முன்மொழிவார் என்றும் மக்கள் குரல் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய திரு லிம் டியன் தம்மை வழிமொழிவார் என்றும் சொல்லி அந்த இருவரையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

மக்கள் குரல் சார்பில் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்ட திரு பிரபு ராமச்சந்திரன் தலைமை தேர்தல் முகவராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

திரு டான் ஜீ சே, திரு டான் கிம் லியன் இருவரும் 2011 அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள்.

சிங்கப்பூரின் முதலீட்டுச் சேமிப்பு நிதி கடந்த ஆண்டுகளில் இழப்பைச் சந்தித்து இருக்கிறது என்பதைச் சுட்டிய திரு டான், உலகப் பொருளியல் நிலவரங்களைப் பொறுத்து முதலீடுகளின் சந்தை மதிப்பு கூடும், குறையும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றார்.

இப்போதைய, வருங்கால தலைமுறையினருக்கு நாட்டின் கடந்த கால சேமிப்புகள் பலன் தருவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட விரும்புவதாகவம் அவர் கூறினார்.

அரசாங்கச் சேவையில் பொருத்தமானவர்கள் உயர்நிலை பொறுப்புகளில் இருப்பதை உறுதிப்படுத்துவது தனது இரண்டாவது முக்கிய கடமை என்ற அவர், அதிபரின் தீவிரமான ஈடுபாடும் புதிய ஒரு இலக்கும் நமது நிர்வாகத்திற்குப் புதிய தெம்பைக் கொடுக்க தேவை என்று தான் நம்புவதாக திருத டான் குறிப்பிட்டார்.

அரசமைப்புச் சட்டப்படி தமக்கு உள்ள கடமைகளை நிறைவேற்றுவது ஒரு புறம் இருக்க, அதிபர் என்ற முறையில் முன்று அடிப்படை துறைகளில் ஒருமித்த கவனம் செலுத்தப் போவதாகவும் திரு டான் தெரிவித்தார்.

குடிக்களின் நல்வாழ்வு; வாழ்க்கைச் செலவு குறைப்பு; அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய நிலையில் வீடு, வேலைகளை உறுதிப்படுத்துவது ஆகியவை அவை.

ஐக்கியமாக, நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டைப் பலப்படுத்துவதே தனது இலக்கு என்றும் திரு டான் மேலும் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட அவருடன் மொத்தம் நால்வர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், தெழில்முனைவர் ஜார்ஜ் கோ, ஜிஐசி நிதியத்தின் முதலீட்டுத்துறை முன்னாள் தலைவர் இங் கோக் செங் ஆகியார் இதர மூவர்.

குறிப்புச் சொற்கள்