சாலை விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டிக்குக் காயம் விளைவித்ததற்காகக் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
லியோங் இயா, 47, என்ற அந்த அதிகாரி, காவல்துறை காரை ஓட்டிச்சென்றபோது ஒரு மோட்டார்சைக்கிளோட்டிமீது மோதினார். 2022 அக்டோபரில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் மோட்டார்சைக்கிளோட்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து குற்றவாளியான லியோங் இயாவிற்கு வெள்ளிக்கிழமையன்று 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. கவனமின்றி காரை ஓட்டி, 39 வயதான பகுதிநேர விநியோக ஊழியர் ஒருவருக்குக் காயம் விளைவித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
ஓராண்டு காலத்துக்கு எல்லா வகை வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கவும் லியோங்கிற்குத் தடை விதிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது லியோங், ஜூரோங் காவல்துறைப் பிரிவில் பணியாற்றியதாக துணை அரசாங்க வழக்கறிஞர் இயாவ் சுவான் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் சட்டத்தை நிலைநாட்டுவதுடன் சரியான நடத்தையைக் கடைப்பிடிக்கவேண்டும். சட்டத்தை மீறும் அதிகாரிகள்மீது நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம்,” என்று அறிக்கை ஒன்றின் மூலம் சிங்கப்பூர் காவல்துறை முன்னதாகக் கூறியிருந்தது.

