மதுபோதையில் வாகனம் ஓட்டி வேறொரு வாகனத்தின்மீது மோதிய கல்வி அமைச்சு ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிராஸ் பசா சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது. குற்றவாளியான 43 வயது எட்மண்ட் லாம் கியாட் சூங் அப்போது போக்குவரத்துக்கு எதிராகத் தனது வாகனத்தை ஓட்டியிருக்கிறார்.
மோதப்பட்ட வாகனத்தின் 54 வயது ஓட்டுநருக்கு உடல்வலி ஏற்பட்டது. அவருக்கு 10 நாள் மருத்துவ விடுப்பும் வழங்கப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமையன்று லாமுக்கு 12 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகவும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாகவும் தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு நாலரை ஆண்டுகளுக்கு அவர் எல்லா வகையான வாகனங்களை ஓட்டுவதற்கும் அவற்றுக்கான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டது.