வீட்டில் அழுகிய உடல்; வளையல், கைக்கடிகாரம் மூலம் அடையாளம் கண்டுபிடிப்பு

2 mins read
f3f00863-b804-4ac7-94b5-983425f56bcc
உயர் ரத்த அழுத்த இதய நோயால் திருவாட்டி தாம் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெபான் கார்டன்சில் உள்ள ஒரு வீட்டில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியாக வசித்து வந்த அவருக்கு குழந்தைகள் இல்லை. பெற்றோர் இறந்துவிட்டனர்.

ஏப்ரல் 24ஆம் தேதி அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் அழுகியிருந்தது.

அவரது கைகளும் சிதைந்திருந்ததால் தடயவியல் அதிகாரிகளால் கைரேகையைப் பதிவு செய்ய முடியவில்லை. அவருக்கு பற்களும் இல்லை. பல் சிகிச்சைக்கு சென்றதற்கான பதிவுகளும் இல்லை.

இதனால் அவரது எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட மரபணு மூலம் அவரை அடையாளம் காணும் முயற்சி எடுக்கப்பட்டது. அதுவும் தோல்வி அடைந்தது. அவரது சகோதரருடன் மரபணு பொருந்தவில்லை. அதன் பிறகுதான் அவர் தத்தெடுக்கப்பட்டவர் என்ற விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் அடையாளம் தெரியாதவர் என்றே குறிப்பிடப்பட்டார்.

ஏப்ரல் 24ஆம் தேதி தெபான் கார்டன்ஸ் ரோடு, புளோக் 48ல் உள்ள நான்காவது மாடி வீட்டில் மாலை 6.45 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவர், கண்டுபிடிக்கப்பட்ட கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு இறுதியாக திருவாட்டி தாம் யோக் ஹிங், வயது 66, என மரண விசாரணை அதிகாரியால் அடையாளம் காணப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியான பெஞ்சமின் சிம், திருவாட்டி தாமின் வீட்டுக்குக் கீழே வசித்தவரின் வீட்டில் நீர்க்கசிவு பிரச்சினை இருந்ததாகத் தெரிவித்தார்.

இது குறித்து பேச திருவாட்டி தாமுடன் தொடர்புகொள்ள முடியாததால் வீவகவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீவக, அவரது சகோதரருடன் தொடர்பு கொண்டது. இதையடுத்து சகோதரர், மற்றோர் உறவினரை திருவாட்டி தாமின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ஏப்ரல் 24ஆம் தேதி அவரது வீட்டை உறவினர் தட்டி திறக்க முயற்சி செய்தபோது பதிலில்லை.

அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது அவர் அழுகிய நிலையில் காணப்பட்டார்.

“வீட்டை உடைத்து யாரும் உள்ளே நுழைந்ததற்கான அறிகுறி இல்லாததால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்படவில்லை,” என்று விசாரணை அதிகாரியான சிம் தெரிவித்தார்.

திருவாட்டி தாமுக்கு உறவினர்களோ, நண்பர்களோ இல்லை என்று அவரது அண்டை வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.

தினமும் காலை 9.00 மணியளவில் அவர் சந்தைக்குச் செல்வார் என்று அவர்கள் கூறினர்.

திருவாட்டி தாமின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இரண்டு, மூன்று வாரங்களாக அவரை யாரும் வெளியே பார்க்கவில்லை.

திருமதி தாம், எப்போதும் ஜேட் வளையல், ஒரு உலோகக் கைக்கடிகாரத்தை அணிந்திருப்பார்.

அவரது உடலில் இரு பொருள்களும் இருந்தன. இதை வைத்துதான் அவர் திருவாட்டி தாம் என்று அண்டை வீட்டுக்காரர்கள் அடையாளம் கண்டுபிடித்தனர்.

குறிப்புச் சொற்கள்