இணையவழி இணையத்தள ஊழியர்களை புதிய சட்டங்களின்படி வகைப்படுத்துவதற்கான யோசனைகளை பொதுமக்களிடம் இருந்து மனிதவள அமைச்சு திரட்டுகிறது.
கிராப், ஃபுட்பாண்டா, லாலாமூவ் போன்ற இணையம் வழியான இணைப்புத்தளங்களை விநியோகிப்பாளர்களும் வாடகை கார் ஓட்டுநர்களும் பயன்படுத்துகிறார்கள்.
இத்தகைய இணையவழி இணைப்புத்தள ஊழியர்களை இதர நிறுவன ஊழியர்களிடம் இருந்தும் சுயதொழில் புரிவோரிடம் இருந்தும் வேறுபடுத்திக் காட்ட அரசாங்கம் விரும்புகிறது.
அதிகாரிகள் வரைந்துள்ள புதிய சட்டங்களின்படி, இந்த இணையவழி ஊழியர்கள் புதிய ஊழியர் வகைக்குள் கொண்டு வரப்படலாம்.
அவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் தகுதிபெற்றுள்ள உதவித் திட்டங்களையும் சட்டப் பாதுகாப்புகளையும் அவர்களால் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
இருப்பினும் பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதி செய்யும் பொருட்டு அத்தகைய ஊழியர்கள் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்துகளைத் திரட்ட விரும்புவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
ஒரு வேலையைச் செய்து முடிக்க நியாயமான முறையில் எத்தனை மணி நேரம் அவர்களுக்குத் தேவைப்படும் என்பது போன்ற அம்சங்களும் அவர்களுக்காக வரையப்படும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வேலையைச் செய்து முடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
தொடர்புடைய செய்திகள்
எனவே, இது தொடர்பான பொதுமக்கள் ஆலோசனையைத் திரட்டும் பணி இணையம் வாயிலாக நடைபெறுகிறது. இணையவழி இணைப்புத்தள ஊழியர்கள் சட்டப்படி எவ்வாறு வரையறுக்கப்படலாம் என்பது பற்றியும் அவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பாக முடியும் என்பது பற்றியும் பொதுமக்கள் யோசனை தெரிவிக்கலாம்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி உள்ள இணையவழி கருத்துத் திரட்டு செப்டம்பர் 4 மாலை 6 மணி வரை நீடிக்கும்.
இதர ஊழியர்களுக்குப் பொருந்தும் வேலையிட காயங்களுக்கான இழப்பீட்டுக் காப்புறுதி, மத்திய சேம நிதி பங்களிப்பு போன்றவற்றை இணைய இணைப்புத்தள ஊழியர்களுக்கும் அளிக்கும் வகையில் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகிறது.
சிங்கப்பூரில் 88,000க்கும் மேற்பட்ட இணையவழி இணைப்புத்தள ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலன்களைக் கவனத்தில் கொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உள்ளது.
புதிய நடவடிக்கைகள் 2024 இரண்டாம் பாதியில் நடப்புக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.