புதிய பொதுப் பாடத்திட்டம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த நான்கு துறைகளில் அறிமுகம்

புதிய பொதுப் பாடத்திட்டம்

2 mins read
d3cb8505-b362-4f10-aa91-f3a785a269f8
மருத்துவம், பல்மருத்துவம், தாதிமை, மருந்தாளுகை ஆகிய நான்கு துறைகளில் சேரும் மாணவர்கள் புதிய பொதுவான பாடங்களையும் கற்க வேண்டும். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இம்மாதத்திலிருந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல்மருத்துவம், தாதிமை, மருந்தாளுகை ஆகிய படிப்புகளில் சேரும் மாணவர்கள், நடைமுறையிலுள்ள வழக்கமான பாடங்களோடு முதல் ஈராண்டுகளுக்குப் பொதுவான பாடங்களையும் கற்பர்.

இந்நான்கு சுகாதாரப் பராமரிப்புத் துறைகளிலும் கிட்டத்தட்ட 870 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளதாகப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

புதிய சுகாதாரப் பராமரிப்பு நிபுணத்துவக் கல்விக்கான பொதுப் பாடத்திட்டத்தின்கீழ், அவர்கள் அனைவரும் ஐந்து பாடப்பிரிவுகளை ஒன்றாகக் கற்பர்.

சிங்கப்பூரின் நோய்த் தடுப்பு உத்தியான ‘ஹெல்தியர் எஸ்ஜி’யை மனத்திற்கொண்டு இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த ஐந்து பாடப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் 13 வாரங்களுக்குள் கற்க வேண்டும். சமூக, சுற்றுச்சூழல் காரணிகள் சுகாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம், சுகாதாரப் பராமரிப்பிற்கான தரவுக் கல்வி உள்ளிட்ட தலைப்புகளை அவை உள்ளடக்கி இருக்கும்.

சுகாதாரப் பராமரிப்பு தொடர்பிலான கணினிசார் சிந்தனைத்திறன், தரவியல், செயற்கை நுண்ணறிவு போன்ற தேர்ச்சிகளையும் அவர்கள் பெற முடியும்.

இணையம் வழியாகவும் நேரடியாகவும் அப்பாடங்கள் கற்பிக்கப்படும்.

அந்நான்கு சுகாதாரப் பராமரிப்புத் துறைகளையும் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்குள் குழு அமைத்து, நோயாளிகளின் இல்லங்களுக்கு அல்லது மற்ற தங்குமிடங்களுக்குச் செல்வர். அதன்மூலம் வகுப்பறையில் தாங்கள் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி, நோயாளிக்கு முழுமையான பராமரிப்பு வழங்கும் அனுபவத்தை அவர்கள் பெறலாம்.

“சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புத் துறை வெகுவிரைவாக மாற வேண்டியுள்ளதால், இப்படி பலதுறைகளும் கலந்த அணுகுமுறை மிகவும் பொருத்தமானதாகிறது,” என்று தேசிய பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரத் துணைத் தலைவரும் பேராசிரியருமான ஏரன் தியன் கூறினார்.

நடப்பு 2023/24 கல்வியாண்டின் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரும் தங்களது இளநிலை மருத்துவப் படிப்பின்போது உயர்மருத்துவத் தகவலியல் பாடத்தையும் பயில வேண்டும்.

பாடத்திட்டமானது சுகாதாரப் பராமரிப்பு, தரவியல், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இருக்கும்.

இதன்மூலம், மாணவர்கள் தரவுகளைப் பயன்படுத்தி நோயாளிகளிடம் மேம்பட்ட விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்றும் அனைத்துச் சுகாதாரப் பராமரிப்புத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளிலும் தகவலைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டது.

தேசிய பல்கலைக்கழகத்தின் மற்ற புலங்களைச் சேர்ந்த இளநிலைப் பட்டக்கல்வி மாணவர்கள், நவீன சுகாதாரப் பராமரிப்பு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த சுகாதாரம் என்ற பாடத்தை எடுத்துப் படிக்கலாம்.

இந்தப் பாடத்தை எடுத்துப் படிக்க விரும்பும் மாணவர்கள், ஈராண்டுகளில் அல்லது அதற்கும் மேற்பட்ட கால வரையறைக்குள் ஐந்து பாடப்பிரிவுகளைப் பயில்வர்.

முதற்கட்டமாக 50 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த மூவாண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பல்கலைக்கழகம்மருத்துவம்சுகாதாரம்