முதியவர் மூட்டிய தீ; மூச்சுத் திணறி மாண்ட பணிப்பெண்

முதியவர் மூட்டிய தீ; மூச்சுத் திணறி மாண்ட பணிப்பெண்

2 mins read
5d8e0544-0d51-4cbb-a6ed-dfd37fc3fa7e
சியா கெக் யோங் தனது படுக்கையில் மூட்டைப்பூச்சிகளைப் பார்த்ததாகவும் அதனால் அதில் தீ மூட்டியதாகவும் கூறினார். - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்

இருமுனைக்கோடி மனநிலையால் (பைபோலார் டிசார்டர்) பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் தனது படுக்கைக்கு மூட்டிய தீயால் அண்டைவீட்டுப் பணிப்பெண் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 73 வயதாகும் சியா கெக் யோங், தன் படுக்கையில் மூட்டைப்பூச்சிகளைப் பார்த்ததாகக் கூறினார். அதனால் மெத்தையைத் தீயிட்டு அவர் கொளுத்தினார்.

தீ அண்டைவீட்டிற்குப் பரவியது. அங்கிருந்த பணிப்பெண் புகையில் மூச்சுத் திணறி மாண்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் 2022 ஜனவரி 29ஆம் தேதி நடந்தது. தெலுக் பிளாங்கா ரைசில் உள்ள புளோக் 39ன் 10ஆம் மாடி வீட்டில் வசித்த சியா அதிகாலை 4 மணிக்குக் கண்விழித்தார்.

மூட்டைப்பூச்சி இருப்பதாக நினைத்து ஒன்றுக்கு மேற்பட்ட கலன்களில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் படுக்கையில் தெளித்தார்.

மூட்டைப்பூச்சி அப்போதும் உயிரோடு இருந்ததாக நினைத்து படுக்கைக்குத் தீ வைத்தார்.

தீ பரவியதும் சில போத்தல் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

எனவே, வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது அவ்வீட்டில் மேலும் நால்வர் உறங்கிக்கொண்டிருந்தனர். புகையால் கண்விழித்த அவர்களும் பின்னர் வீட்டிலிருந்து வெளியேறினர்.

சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் அந்த புளோக்கில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர்.

சியாவின் வீட்டில் தேவைக்குமேல் சேகரிக்கப்பட்டிருந்த பொருள்கள் தீ பரவக் காரணமாக இருந்ததாகவும் சமையல் எரிவாயுக் குழாய் திறந்திருந்ததாகவும் கூறப்பட்டது. சியா மூட்டிய தீ 11வது மாடியில் இருந்த ஒரு வீட்டிற்கும் பரவியது.

சம்பவத்தன்று காலை 6 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து 11வது மாடிக்கு விரைந்த தீயணைப்பாளர்கள் தீ பரவிய வீட்டில் கதவை உடைத்து நுழைய நேரிட்டது.

அங்கு சுயநினைவின்றிக் காணப்பட்ட பணிப்பெண் கொய்மதுன் அச்மட் அலி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மூச்சுத் திணறலுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரவு 10.30 மணியளவில் அவர் மாண்டுபோனார்.

தீங்கு விளைவிக்கும் தனது நடவடிக்கையால் திருவாட்டி கொய்மதுன் உயிரிழக்கக் காரணமாக இருந்ததை சியா ஒப்புக்கொண்டார். அவருக்கு செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்