கூடுதல் அரசாங்க சொத்துகள் கூட்டுக் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றம்

கூடுதல் அரசாங்க சொத்துகள் கூட்டுக் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றம்

2 mins read
969f6913-0468-41fe-9a9f-eabc3c24413d
கூட்டுக் குடியிருப்புப் பகுதியாக மாற்றியமைக்கப்படவுள்ள இந்து சாலையில் இருக்கும் கட்டடம். - படம்: சிங்கப்பூர் நில ஆணையம்

அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்துகளில் கூடுதலானவை வரும் மாதங்களில் கூட்டுக் குடியிருப்புப் பகுதிகளாக (கோ-லிவிங் ஸ்பேசஸ்) வகைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உறவினர்கள் அல்லாத அல்லது தங்களுக்கிடையே தொடர்பில்லாத சிலர் ஒன்றாக வாழும் பகுதிகளே கூட்டுக் குடியிருப்புப் பகுதிகள் என்றழைக்கப்படுகின்றன.

இதற்கென லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள கட்டடத்தை மறுசீரமைக்க சிங்கப்பூர் நில ஆணையம் புதன்கிழமையன்று ஏலக்குத்தகையை வழங்கியது.

எண் 79 - 95, இந்து சாலையில் அமைந்திருக்கும் இரண்டு மாடிக் கட்டடத்துக்கான ஏலக்குத்தகை எக்கோ-எனர்ஜி எனும் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடியிருப்புப் பகுதிகளை ஏற்பாடு செய்துதரும் ‘கோவ் லிவிங்’ எனும் நிறுவனத்துடன் எக்கோ-எனர்ஜி இணைந்து செயல்படவுள்ளது.

இக்கட்டடத்தின் பரப்பளவு ஏறக்குறைய 1,700 சதுர மீட்டர். இதில் 18 கடைவீடுகள் உள்ளன.

முதன்முறையாகக் கூட்டுக் குடியிருப்புப் பகுதியாகப் பயன்படுத்தப்படவிருக்கும் அரசாங்கத்துக்குச் சொந்தமான கடைவீடு இதுதான்.

சமூகத்தில் கூட்டுக் குடியிருப்புப் பகுதிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதற்கேற்றவாறு கூடுதலான அரசாங்கச் சொத்துகள் அவற்றுக்கென ஒதுக்கப்படுகின்றன.

இந்து சாலையில் உள்ள கட்டடத்துக்கான ஏலக்குத்தகையைப் பெற 16 நிறுவனங்கள் முன்வந்ததாக சிங்கப்பூர் நில ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மாறிவரும் வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு இதுபோன்ற இடைக்காலக் குடியிருப்புப் பகுதிகளை அடையாளம் காண சிங்கப்பூர் நில ஆணையம் பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கொலின் லோ கூறினார். புத்தாக்க அம்சங்கள் கொண்ட மாறுபட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கான தேவை இருப்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்து சாலைக் கட்டடத்திற்கு மறுசீரமைக்குப்பின் ‘1925 குவாட்டர்ஸ்’ என்று பெயரிடப்படும்.

குறிப்புச் சொற்கள்