தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1 பில்லியன் சொத்துகள் பறிமுதல்; விசாரணையில் 30 வெளிநாட்டினர்

2 mins read
06c3fd52-9704-47bd-9e65-492419330f29
நல்ல நிலையில் உள்ள பங்களாக்கள், விலைமிக்க கூட்டுரிமை வீடுகள், ஆடம்பர கார்கள் உள்ளிட்ட $1 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. - படம்: சிங்கப்பூர் காவல்துறை
multi-img1 of 5

சிங்கப்பூரில் சட்ட விரோத பணப்புழக்கத்திற்கு எதிரான ஆகப் பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக சிங்கப்பூர் காவல்துறை வெளிநாட்டுக் கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்துள்ளது.

அந்தக் கும்பல் சட்டவிரோத பணப்புழக்கங்களில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கும்பல் சிங்கப்பூரில் நல்ல நிலையில் உள்ள பங்களாக்கள், அதிக விலைகொண்ட கூட்டுரிமை வீடுகள், ஆடம்பர கார்கள் உள்ளிட்ட $1 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளைக் குவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோத காரியங்கள் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை நியாயப்படுத்த தில்லுமுல்லு ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

காவல்துறை ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு தீவு முழுவதும் பெரிய அளவில் சோதனைகளை முடுக்கிவிட்டது.

நல்ல நிலையில் இருக்கக்கூடிய பங்களாக்கள், அதிக விலையுள்ள கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றில் சோதனையிட்ட அதிகாரிகள் பல சந்தேகப் பேர்வழிகளைச் சுற்றி வளைத்தனர்.

ஒரு மாது உட்பட 10 பேர் கைதானார்கள். அவர்கள்மீது புதன்கிழமை இரவு குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவர்கள் 31 வயது முதல் 44 வயது வரைப்பட்டவர்கள். தில்லுமுல்லு, சட்டவிரோதமாகப் பணத்தைக் கையாண்டது, அதிகாரிகள் கைது செய்தபோது அதை எதிர்த்தது உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

புலன்விசாரணைகளில் இதர 12 பேர் உதவி வருகிறார்கள்; எட்டுப் பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 400 அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தார்கள் என்று புதன்கிழமை காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

வெளிநாட்டினர் அடங்கிய ஒரு கும்பல் வெளிநாடுகளில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணத்தை நல்ல பணமாக மாற்றுவதில் ஈடுபட்டு இருப்பதாகக் காவல்துறை அடையாளம் கண்டு இருக்கிறது.

அந்தக் குற்றச் செயல்களில் மோசடிகள், இணையச் சூதாட்டம் உள்ளிட்ட பலவும் அடங்கும்.

மொத்தம் $815 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 94 சொத்துகள், 50 வாகனங்களை விற்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

காவல்துறை 35க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்கிறது. அந்தக் கணக்குகளில் மொத்தம் $110 மில்லியனுக்கும் அதிகமான தொகை இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

$23 மில்லியனுக்கும் மேற்பட்ட ரொக்கம், 250க்கும் மேற்பட்ட ஆடம்பரக் கைப்பைகள், கடிகாரங்கள், கணினிகள், கைப்பேசிகள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட மின்னணுக் கருவிகள், 270க்கும் மேற்பட்ட நகைகள், இரண்டு தங்கக் கட்டிகள், 11 ஆவணங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்