சட்டவிரோதப் பண விவகாரம்: மேலும் 11 சிங்கப்பூர் சொத்துகளை விற்கத் தடை

2 mins read
3595c6df-8193-4ed8-ad19-5c3c332c94b6
செந்தோசா கோவ் பகுதியில் உள்ள சொத்துகள் உள்ளிட்டவற்றை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பல பில்லியன் வெள்ளி மதிப்புள்ள கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரத்தில் சந்தேக நபர்களுடன் தொடர்புடைய மேலும் 11 சிங்கப்பூர் சொத்துகளை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஃபுஜியான் மாநிலத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களுடன் இந்தச் சொத்துகள் தொடர்புடையவை.

இவற்றோடு இந்த விவகாரத்தில் மொத்தம் 105 சொத்துகளை விற்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக 94 சொத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த 105 சொத்துகளின் மதிப்பு சுமார் 831 மில்லியன் வெள்ளி எனக் கணிக்கப்பட்டுள்ளது. செந்தோசா கோவ் பகுதியில் உள்ள பங்களாக்கள், 79 கூட்டுரிமை வீடுகள் ஆகியவை தடை விதிக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும். தடை விதிக்கப்பட்ட கூட்டுரிமை வீடுகளில் 19 இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.

இவற்றைத் தவிர 19 வர்த்தக, தொழில்துறைப் பகுதி சொத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்தச் சொத்துகள் விசாரணை நடத்தப்பட்டு வரும் தனிநபர்களுக்குச் சொந்தமானவை என்று காவல்துறை வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.

கைதானவர்கள் அல்லது காவல்துறையினரால் தேடப்பட்டு வருபவர்களின் கணவர், மனைவிமார் உள்ளிட்டோர் சந்தேக நபர்களில் அடங்குவர்.

இந்த விவகாரத்தின் தொடர்பில் ஃபுஜியான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கைதுசெய்யப்பட்டனர். கைதானபோது அவர்கள் ‘ஜிசிபி’ எனப்படும் உயர்தர சொகுசு பங்களாக்களில் இருந்தனர்.

அந்த பங்களாக்கள் சந்தேக நபர்களுக்குச் சொந்தமானவை அல்ல என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர். அவற்றை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முடக்கப்பட்ட அல்லது விற்பதற்குத் தடை விதிக்கப்பட்ட சொத்துகளில் ‘ஜிசிபி’ பங்களாக்கள் ஏதும் இல்லை என்று காவல்துறை குறிப்பிட்டது.

இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமையன்று காவல்துறையினர் தீவு முழுவதும் பெரிய அளவில சோதனை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு ‘ஜிசிபி’ பங்களாக்கள், உயர்தர கூட்டுரிமை வீடுகள் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தங்ளின், புக்கிட் திமா, ஆர்ச்சர்ட் சாலை, செந்தோசா, ரிவர் வேலி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்