கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்குவது உள்ளிட்ட நிதி சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 10 வெளிநாட்டவர்மீது புதன்கிழமையன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் (எம்பிளாய்மெண்ட் பாஸ்) அல்லது அவர்களின் குடும்பத்தாருக்கான ‘டிப்பெண்டண்ட் பாஸ்’ உரிமம் பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள்மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அது குறித்து தாங்கள் காவல்துறையுடன் தொடர்பில் இருப்பதாக மனிதவள அமைச்சு கூறியது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு மனிதவள அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.
சந்தேக நபர்கள் 31லிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டனர்.
அன்றைய தினம் சிங்கப்பூர் முழுவதும் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் கைதாயினர். சோதனையில் சுமார் ஒரு பில்லியன் வெள்ளி மதிப்பு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது முடக்கப்பட்டன.
சந்தேக நபர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களில் யாரும் சிங்கப்பூரரோ நிரந்தரவாசியோ அல்லர்.

