டிக்டாக் பயனாளருக்கு ‘பொஃப்மா’ உத்தரவு

1 mins read
3e9bcbc0-85d4-448c-b2a3-bc6c7c27dc71
dr.ishhaq.jay எனும் டிக்டாக் பயனாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் டிக்டாக் சமூக ஊடகப் பயனாளர் ஒருவருக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ரகசியங்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட dr.ishhaq.jay என்ற பெயரைக் கொண்ட டிக்டாக் கணக்கை வைத்திருப்பவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேர்தலில் ஒரு வாக்காளர் எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பதை அரசாங்கத்தால் அடையாளம் காண முடியும் என்று dr.ishhaq.jay ஜூலை மாதம் 17ஆம் தேதியன்று டிக்டாக்கில் பதிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அந்த விவரத்தைத் தெரிந்துகொண்டு வாக்காளர்களைத் தண்டிப்பதற்காக அரசாங்கம் அவ்வாறு செய்வதாக அப்பதிவில் கூறப்பட்டிருந்ததாகவும் பிரதமர் அலுவலகத்தின்கீழ் இயங்கும் தேர்தல் ஆணையம் சுட்டியது.

கல்வி அமைச்சரும் பொதுத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான சான் சுன் சுங்கின் உத்தரவின்படி ‘பொஃப்மா’ அலுவலகம் திருத்த உத்தரவைப் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் ஒரு வாக்காளர் யாருக்கு வாக்களித்துள்ளார் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வழியில்லை என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியது.

இந்த ‘பொஃப்மா’ திருத்த உத்தரவின்படி தனது பதிவில் தவறான தகவல்கள் இடம்பெற்றதை விளக்கி dr.ishhaq.jay புதிய டிக்டாக் பதிவை உருவாக்கவேண்டும். அப்பதிவில் அரசாங்கம் தந்துள்ள விளக்கம் கொண்ட இணைய முகவரி இடம்பெற்றிருக்கவேண்டும்.

தவறான தகவல்களைக் கொண்ட dr.ishhaq.jayஇன் முன்னைய பதிவைப் பார்த்த மற்ற பயனீட்டாளர்களுக்குத் திருத்தக் குறிப்பு வழங்கப்படவேண்டும் என்று டிக்டாக்கிற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்