ஜார்ஜ் கோவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம்

3 mins read
ec71d59e-f2c3-45d1-b652-aa17f4e9ec65
வெள்ளிக்கிழமையன்று தனது வீட்டில் செய்தியாளர்களுடன் பேசிய திரு ஜார்ஜ் கோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான திரு ஜார்ஜ் கோவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அதிபர் தேர்தல் குழு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பத்தில் தனக்குச் சொந்தமானவை என்று திரு கோ ஐந்து நிறுவனங்களைக் குறிப்பிட்டிருந்தார். அது தங்களுக்குத் திருப்திகரமான தகவலாக அமையவில்லை என்று அதிபர் தேர்தல் குழு தெரிவித்தது.

தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(4)(b)க்குக்கீழ் திரு கோவின் விண்ணப்பம் சரிவர கருத்தில்கொள்ளப்பட்டதாக வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் அதிபர் தேர்தல் குழு கூறியது.

எனினும், அந்த ஐந்து நிறுவனங்களுக்கான உரிமை தொடர்பான தகவல்கள், அவை எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன, நடத்தப்படுகின்றன உள்ளிட்ட விவரங்கள் கருத்தில்கொள்ளப்பட்டதாகவும் அவை ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்ற விளக்கம் தங்களுக்குத் திருப்திகரமாக இல்லை என்றும் அதிபர் தேர்தல் குழு தெரிவித்தது.

“அதனால் அதிபர் தேர்தல் குழு, திரு கோவிற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்ட காரணங்களினால் அரசமைப்புச் சட்டப் பிரிவு19(4)(b)க்குக்கீழ் அவருக்கு தகுதிச் சான்றிதழை வழங்க முடியவில்லை,” என்று குழு சொன்னது.

தேர்தல் குழுவின் முடிவைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திரு கோ, முன்னதாக தனது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார்.

“அவர்களின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை இது நியாயமற்ற முடிவு,” என்றார் திரு கோ.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிச் சான்றிதழ் தனக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கிருந்ததாக திரு கோ சொன்னார். தனது தகுதியை ஆராய பல வல்லுநர்களைக் கொண்ட குழுவின் ஆலோசனையைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களின் முடிவுக்குப் பின்னால் உள்ள சரியான காரணங்களை அதிபர் தேர்தல் குழு விளக்கவில்லை என்று திரு கோ சாடினார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளைக் குழு மேலோட்டமாகக் கருத்தில்கொண்டதாக அவர் குறை கூறினார்.

திரு கோ தங்கள்மீது வெளிப்படையாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தைப் பொதுப்படையாக்கியதாக அதிபர் தேர்தல் குழு குறிப்பிட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான திரு கோவின் விண்ணப்பத்தில் இடம்பெற்ற ஐந்து நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை குழு வெளியிட்டது.

ஒலியா இன்டர்நேஷனல் குழுமத்தின் நிர்வாகத் தலைவர், பர்த்தாமா ஹோல்டிங்சின் துணை நிர்வாகத் தலைவர், ஐடிஜி இன்டர்நேஷனல் குழுமத்தின் நிர்வாகத் தலைவர், கிரவுன் இசென்ஷியல்சின் தலைமை நிர்வாக அதிகாரி, வெர்னல் வென்சர்சின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய பொறுப்புகளை வகிப்பதாக திரு கோ, தனது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார்.

கிரவுன் இசென்ஷியல்ஸ், பிரிட்டனுக்குச் சொந்தமான வர்ஜின் தீவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(4)(b)(ii)க்குக்கீழ் மிகப் பெரிய தனியார் நிறுவனத்தை நடத்துவதன் மூலம் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்ட ஒருவர் போதுமான அனுபவமும் ஆற்றலும் பெற்றிருக்கிறாரா என்பதை அதிபர் தேர்தல் குழு கருத்தில்கொள்ளவேண்டும் என்பதும் திரு கோவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“பல்வேறு சிறிய தனியார் நிறுவனங்களை நடத்துவதன் மூலம் பெறும் அனுபவமும் ஆற்றலும் அதற்கு ஈடாகாது,” என்று அதிபர் தேர்தல் குழு கூறியது.

குறிப்புச் சொற்கள்