சிங்கப்பூர் காவல்துறை: மலேசியக் கடற்பகுதிக்குள் நுழையவில்லை

சிங்கப்பூர் காவல்துறை: மலேசியக் கடற்பகுதிக்குள் நுழையவில்லை

1 mins read
055b21b0-a59e-4687-8108-6516343c6abd
மலேசிய மீன்பிடிப் படகு துவாஸ் அருகில் உள்ள கடற்பகுதியில் இருந்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடலோரப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான படகு கடந்த திங்கட்கிழமையன்று மலேசியக் கடற்பகுதிக்குள் நுழைந்ததாக மலேசிய ஊடகம் வெளியாக்கிய தகவல் உண்மையல்ல என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

மலேசிய மீன்பிடிப் படகு ஒன்று மலேசியக் கடற்பகுதியில் வலை விரித்திருந்ததாகவும் அந்தப் படகை நோக்கி சிங்கப்பூர் கடலோரப் பாதுகாப்புப் படையின் படகு விரைந்ததாகவும் மலேசியாவின் இரண்டு நாளிதழ்கள் தெரிவித்திருந்தன.

இதைச் சிங்கப்பூர் காவல்துறை மறுத்தது. அந்தச் சம்பவம் சிங்கப்பூர் கடற்பகுதியில் நிகழ்ந்ததாக அது கூறியது.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 6.55 மணிக்கு துவாஸ் அருகில் உள்ள கடற்பகுதியில் அந்த மலேசிய மீன்பிடிப் படகை சிங்கப்பூர் கடலோரக் காவல் படையினர் பார்த்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூர் கடற்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அந்த மலேசியப் படகிற்கு அதிகாரிகள் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மலேசியக் கடற்பகுதிக்குள் சென்றுவிடாமல் இருக்க சிங்கப்பூர் கடலோரப் பாதுகாப்புப் படையின் படகு பின்னோக்கிச் செலுத்தப்பட்டது என்றும் அப்போது அதன் உந்துவிசையில் மீன்பிடி வலை ஒன்று சிக்கிக்கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

வலையை உந்துவிசையிலிருந்து அதிகாரிகள் அகற்றினர். அப்போது வலை கிழிந்தது.

கடந்த திங்கட்கிழமையன்று சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் நுழைந்த மலேசிய மீனவர் கடந்த அக்டோபர் மாதத்திலும் அவ்வாறு செய்திருந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

சிங்கப்பூர் கடற்பகுதியைவிட்டு வெளியேறும்படி அவரிடம் அப்போதும் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தாம் மலேசியக் கடற்பகுதியில் இருப்பதாக அந்த மீனவர் அப்போதும் பொய் கூறியதாக காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்