பிரதமர் லீ: ஊழலற்ற, தூய்மையான நிர்வாக முறையைக் கட்டிக்காப்பேன்

2 mins read
21a5aacb-623c-4dbb-ad84-9da3c368acd0
‘புதிய சிங்கப்பூர் உணர்வை உருவாக்குவோம்’ கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சிப் பலகை. - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

என்ன விலை கொடுத்தாலும் சரி, எத்தகைய சிக்கல்கள், அரசியல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் சரி, அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தூய்மையான, ஊழலற்ற நிர்வாக முறையைக் கட்டிக்காக்க கூடுமானவரை பாடுபடுவேன் என பிரதமர் லீ சியன் லூங் உறுதிகூறி இருக்கிறார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமரும் நாட்டை நிறுவிய தலைவர்களில் ஒருவருமான திரு லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் இன்னும் ஓரிரு வாரங்களில் கொண்டாடப்படவிருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், திரு லீ குவான் இயூ தமது 90வது பிறந்தநாளன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு செய்தியைச் சுட்டினார்.

‘‘சிங்கப்பூர் எப்போதுமே ஊழலற்றதாக, தூய்மையானதாக இருந்து வரவேண்டும். அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்மாதிரியாகத் திகழவேண்டும். இல்லையேல், சிங்கப்பூரின் கதை முடிந்துவிடும்,’’ என்று அமரர் லீ கூறியதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

‘‘நீதி, சமத்துவம்; சமய சுதந்திரம், இன நல்லிணக்கம்; உன்னதத்திற்கான உறுதிப்பாடு; தகுதிக்கு முன்னுரிமை என்ற நியாயமான ஏற்பாட்டு முறை; எப்பாடுபட்டாலும் நேர்மையான, ஊழலற்ற அரசாங்கத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற உறுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய முன்னோடித் தலைவர்கள் நாட்டை உருவாக்கித் தந்துள்ளனர்.

‘‘நேர்மையும் ஊழலற்ற தன்மையும் சிங்கப்பூருக்கு அடிப்படையானவை. அவற்றின் அடிப்படையிலேயே நாம் ஊழலற்ற ஆற்றல்மிகு அரசாங்கத்தை நிர்வகித்து நடத்தி சிங்கப்பூரர்களுக்கு நற்பலன்களை உருவாக்கித் தருகிறோம்,’’ என்று திரு லீ குறிப்பிட்டார்.

திரு லீ குவான் இயூவும் நாட்டை நிறுவிய இதர தலைவர்களும் கடைப்பிடித்த நன்னெறிகளையும் கோட்பாடுகளையும் நினைவிற்கொண்டு அவற்றுக்கான நம்முடைய உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு இது தக்க தருணம் என்றும் திரு லீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்