வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல் திரட்டும் வழக்கறிஞர்கள், அவற்றின் துல்லியத்தன்மையைச் சரிபார்ப்பது அவசியம் என்பதை அவர் நினைவூட்டினார்.
ஏனெனில், செயற்கை நுண்ணறிவானது அவர்களின் பணிக்குத் துணைக்கருவியாகத் திகழலாமே ஒழிய, அதற்கு மாற்றாக இருக்கக்கூடாது என்று திரு மேனன் அறிவுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளால் அறஞ்சார்ந்த பல்வேறு இடர்கள் தோன்றலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏறக்குறைய 160 புதிய வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றியபோது திரு சுந்தரேஷ் மேனன் இவ்வாறு சொன்னார்.
நீதி கிடைக்கும் வழிமுறைகளை மேம்படுத்துவதில் சிங்கப்பூர் நீதிமன்றங்களின் முயற்சிகளுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிதாக உருவெடுக்கும் மின்னிலக்கக் கருவிகளைக் கையாள வழக்கறிஞர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆயினும், “நேர்மை, நாணயம் போன்ற பண்புகளால் அவை கட்டமைக்கப்படவில்லை. ஆதலால், அவை தவறான விடைகளையும் அளிக்கலாம்,” என்றார் திரு மேனன்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘சாட்ஜிபிடி’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரு வழக்கறிஞர்கள், போலியான வழக்குகளைச் சரிபார்க்கத் தவறியமைக்காக அபராதமும் தண்டனையும் விதிக்கப் பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.


