அமைச்சர் டெஸ்மண்ட் லீ: குடும்பங்களுக்கும் ஒற்றையருக்கும் பொருந்தும்

மறுவிற்பனை ‘பிளஸ்’ வீடுகளுக்கு $14,000 வருமான உச்ச வரம்பு

2 mins read
9e68f134-d4a3-4015-8b2b-2d27f97ecd0a
குறைந்தபட்ச குடியிருப்புக் காலமான பத்தாண்டுகளுக்குப் பிறகும் ‘பிளஸ்’ வகை வீடுகளின் உரிமையாளர்கள், அவற்றை முழுமையாக வாடகைக்கு விட முடியாது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாத வருமானமாக $14,000 அல்லது அதற்கும் குறைவாக ஈட்டும் குடும்பங்களும் ஒற்றையர்களும் மட்டுமே எதிர்காலத்தில் மறுவிற்பனைச் சந்தையில் ‘பிளஸ்’ வகை வீடுகளை வாங்க முடியும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச குடியிருப்புக் காலமான பத்தாண்டுகளுக்குப் பிறகும் ‘பிளஸ்’ வகை வீடுகளின் உரிமையாளர்கள், அவற்றை முழுமையாக வாடகைக்கு விட முடியாது என்றும் அவர் கூறினார்.

புதிய ‘பிளஸ்’ வகை வீடுகளுக்கான மறுவிற்பனை விதிமுறைகளை விவரித்த அமைச்சர் லீ, வீடுகளுக்கான தேவையை மட்டுப்படுத்தவும் அத்தகைய வீடுகள் கட்டுப்படியான விலையிலும் காலப்போக்கில் அனைவரையும் உள்ளடக்குவதாக இருக்கவும் இந்த விதிமுறைகள் உதவும் என்றார்.

இப்போதைக்கு, கிட்டத்தட்ட பத்தில் எட்டு சிங்கப்பூர்க் குடும்பங்கள் மாதத்திற்கு 14,000 வெள்ளிக்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளை வாங்கவும் அதுவே உச்ச வரம்பாக உள்ளது.

சிங்கப்பூரின் ஒவ்வொரு வட்டாரத்திலும், பெருவிரைவு ரயில் நிலையங்கள் அல்லது நகர மையங்கள் போன்ற விருப்பத்தெரிவுமிக்க இடங்களை ஒட்டி புதிய வகை ‘பிளஸ்’ வீடுகள் கட்டப்படும்.

அடுத்த ஆண்டு பிற்பாதியில்தான் ‘பிளஸ்’ வகை வீடுகளின் விற்பனை நடவடிக்கை அறிமுகம் காணும்.

வரும் 2024ஆம் ஆண்டி பிற்பாதியிலிருந்து ‘பிடிஓ’ வீடுகள் அனைத்தும் முதன்மை (பிரைம்), இடைநிலை (பிளஸ்), அடிப்படை (ஸ்டாண்டர்டு) என மூவகைப்படுத்தப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை தமது தேசிய தினப் பேரணி உரையின்போது அறிவித்தார்.

அதன்பின், இப்போதுள்ள முதிரச்சியடைந்த பேட்டை, முதிர்ச்சியடையாத பேட்டை எனும் வகைப்பாடு கைவிடப்படும்.

இந்நிலையில், வீவக வீடுகளை வகைப்படுத்துவதிலும் விற்பதிலும் கட்டுப்படியாகும் தன்மை, ஒவ்வொரு நகர்ப்பகுதியிலும் வட்டாரத்திலும் நல்லதொரு சமூகக் கலப்பு, நடுநிலைமை ஆகிய முக்கிய நோக்கங்களைக் கட்டிக்காப்பதை உறுதிசெய்ய இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறுவதாக அமைச்சர் லீ தெரிவித்துள்ளார்.

மறுவிற்பனைச் சந்தையில் சிங்கப்பூரர்கள் மட்டுமே ‘பிளஸ்’ வகை வீடுகளை வாங்க முடியும்.

இப்போதைக்கு, மறுவிற்பனைச் சந்தையில் ‘பிரைம்’ முதன்மை வீடுகளைத் தவிர்த்து, மற்ற வீடுகளை வாங்குவதற்கு வருமான உச்ச வரம்பு இல்லை. ‘பிரைம்’ முதன்மை வீடுகள் இன்னும் மறுவிற்பனைச் சந்தைக்கு வரவில்லை.

வீடமைப்புத் திட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள ‘ஸ்டாண்டர்டு’ வீடுகளை வாங்க மறுவிற்பனைச் சந்தையில் வருமான உச்ச வரம்பு இல்லை.

ஆயினும், ‘பிளஸ்’, ‘பிரைம்’ வீடுகளின் குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் பத்தாண்டுகள். ‘ஸ்டாண்டர்டு’ வீடுகளுக்கு அது ஐந்தாண்டுகள்தான்.

மறுவிற்பனைச் சந்தையில் முதன்முறையாக தங்களது ‘பிளஸ்’, ‘பிரைம்’ வீடுகளை விற்போர், கூடுதலாகப் பெற்ற மானியங்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இந்த விதிமாற்றங்கள் இப்போதுள்ள 1.1 மில்லியன் வீவக வீடுகளுக்குப் பொருந்தாது என்று அமைச்சர் லீ குறிப்பிட்டார். அவற்றுக்கு நடப்பிலுள்ள விதிமுறைகளே தொடரும்.

குறிப்புச் சொற்கள்