சிங்கப்பூரில் $1 பில்லியன் கள்ளப்பணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் சந்தேகப் பேர்வழிகல் ஒரு கட்டமைப்பில் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்பதற்கான தகவல் கிடைத்து இருப்பதாக புதன்கிழமை நீதிமன்ற விசாரணையில் அரசினர் தரப்பு தெரிவித்தது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சு போலின், 41, என்பவர் ஒருவர். அவருக்கு பிணை அனுமதிக்கும்படி கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
வழக்கு விசாரணையின்போது அரசாங்கத் துணை வழக்குரைஞர் இங் ஜின் டிங் வாதாடினார்.
இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பில் 10 பேர்மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. அந்த 10 பேரைத் தவிர இதர பல சாட்சியங்களையும் விசாரிக்க வேண்டி இருக்கலாம்.
ஆகையால், சந்தேகப்பேர்வழியான சு போலினுக்கு பிணையை அனுமதிக்கக் கூடாது என்று வழக்குரைஞர் வாதிட்டார்.
பிணை அனுமதிக்கப்பட்டால் சாட்சியங்கள் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அவர் வாதாடினார்.
இந்தச் சட்டவிரோத பண விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கும் 10 சந்தேகநபர்களில் ஆறு பேர் புதன்கிழமை காணொளி மூலம் அரசாங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள். மற்றவர்கள் புதன்கிழமை பின்நேரத்தில் முன்னிலையாகவிருந்தார்கள்.
சு போலின் கம்போடியாவைச் சேர்ந்தவர். அவர் சிங்கப்பூரில் நாசிம் ரோட்டில் உள்ள பங்களா ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவரிடம் சீனாவில் பிறப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இருந்தது. $777,000க்கும் மேற்பட்ட ரொக்கம், 33 ஆடம்பரக் கைப்பைகள், கடிகாரங்கள், 75 நகைகள் ஆகியவை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியது. அந்தக் கணக்குகளில் $2.4 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை இருந்தது.
சு போலின் இதயக் கோளாறு காரணமாக சாங்கி மருத்துவ நிலையத்தில் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை வார்டில் சிகிச்சையில் இருந்ததாக அரசாங்க வழக்குரைஞர் இங் குறிப்பிட்டார்.
சு போலின் சார்பில் வழக்கறிஞர் சுனில் சுதீசன் முன்னிலையாகிறார். தன் கட்சிக்காரருக்கு உடல்நலப் பிரச்சினை இருப்பதால் அவருக்குப் பிணையை அனுமதிக்கும்படி அந்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை அரசாங்கத் துணை வழக்குரைஞர் நிராகரித்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, அரசினர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு சு போலினுக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டார்.
சு போலினின் சகோதரரான சு ஹாய்ஜின், 40, என்பவரும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அதிகாரிகள் கைது செய்தபோது முரண்டுபிடித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
ஹாலண்ட் ரோட்டுக்கு அருகே இருக்கும் எவர்ட் பார்க்கில் உள்ள வீடு ஒன்றில் சு ஹாய்ஜினை கைது செய்ய அதிகாரிகள் சென்ற போது அந்த நபர், கதவை திறக்க மறுத்துவிட்டார். வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
ஒரு வடிகாலில் பதுங்கி இருந்த அவரை காவல்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அந்த நபருக்கு கைகளிலும் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தனக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய முடியுமா என்று நீதிமன்றத்தை சு ஹாய்ஜின் கேட்டுக்கொண்டார். அவருடைய வழக்கறிஞரையும் மருத்துவமனையையும் கலந்து ஆலோசித்து இதனை செய்யலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
சென் சிங்யுயான், 33, என்ற சந்தேகநபருக்கு எதிரான வழக்கு முதன்முதலாக நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வந்தது.
இவருடைய மூன்று ஆடம்பரக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு சொத்தை விற்க முடியாத அளவுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று அரசாங்கத் தரப்பில் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
சு வென்சியாங் என்பவருக்கு எதிரான வழக்கும் விசாரிக்கப்பட்டது. இவர், தனது அடுத்த விசாரணைக்கு முன்னதாகவே நாள் குறிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிகாரிகளுடன் ஒத்துழைக்க முயலப்போவதாகவும் இவர் கூறினார். ஆனால், இதை நீதிபதி ஏற்கவில்லை.
குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரில் ஒரே ஒரு மாதான லின் போயிங் என்பவரின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் பெயரில் இருந்த $72 மில்லியன் மதிப்புள்ள ஐந்து சொத்துகளை விற்க முடியாதபடி உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
லின்னும் அவரின் காதலரான ஸாங் ருய்ஜின் என்பவரும் செந்தோசா கோவ்வில் உள்ள பியர்ல் தீவில் பங்களாவில் கைதானார்கள்.
வாங் தேஹாய், 34, என்ற சந்தேகப் பேர்வழி ஆர்ச்சர்ட் ரோடு அருகே உள்ள பேட்டர்சன் ஹில்லில் இருக்கும் கூட்டுரிமை அடுக்குமாடி வீட்டில் கைதானார்.
இவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புதன்கிழமை மறுத்தார்.
ஆறு சந்தேகப் பேர்வழிகலும் ஆகஸ்ட் 30ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள்.