முதியோருக்கு ஆறுதல் தரும் புதிய வாக்களிப்பு ஏற்பாடு

முதியோருக்கு ஆறுதல் தரும் புதிய வாக்களிப்பு ஏற்பாடு

2 mins read
2b1061a1-003b-4180-acbd-e0ea5eaf7fda
என்டியுசி ஹெல்த் தாதிமை இல்லத்தின் (ஜூரோங் ஸ்பிரிங்) பன்னோக்கு மண்டபத்தில் சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது. - படம்: என்டியுசி ஹெல்த்

தாதிமை இல்லங்களில் அமைக்கப்படவுள்ள சிறப்பு வாக்குச்சாவடிகளால் நடமாடச் சிரமப்படும் முதியோருக்கு வாக்களிப்பது மேலும் எளிதாகும். அத்துடன் நடமாட முடியாத முதியவர்களும் தங்களின் ஜனநாயக உரிமையை இந்த அதிபர் தேர்தலில் பயன்படுத்தி வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவர் என்று தாதிமை இல்ல நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் 31 தாதிமை இல்லங்களில் ஏற்பாடு செய்யப்படும் முன்னோடித் திட்டத்தின்படி வாக்குச்சாவடிகள் அந்தந்த தாதிமை இல்லங்களிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அத்துடன் நடமாடும் வாக்களிப்புக் குழுக்கள் படுத்த படுக்கையாய் உள்ள இல்லவாசிகளை நாடி வாக்குகளைப் பெறவுள்ளதாக அறியப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் தேதியன்று தேர்தல் தினத்தன்று காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரையில் வாக்களிக்க முடியும்.

முன்னோடித் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தாதிமை இல்லத்திலும் 50க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தாதிமை இல்லவாசிகள் பெரும்பாலானோர் சக்கர நாற்காலியில் நடமாடும் நிலையில் அல்லது முற்றிலும் நடமாட முடியாதவர்கள் என்ற நிலையில் இருக்க சமூகத்தில் அமைக்கப்பட்ட பொதுவான ஒரு வாக்குச்சாவடிக்கு அவர்களைக் கொண்டு செல்வதற்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்வது சவாலாக அமையலாம் என்று என்டியுசி ஹெல்த் இல்லவாசிச் சேவைகளுக்கான குழும இயக்குநர் (மேற்குப் பகுதி) சோங் வய் ஃபங் கூறினார்.

இம்முறை என்டியுசி ஹெல்த் கீழ் இயங்கும் ஆறு தாதிமை இல்லங்களும் முன்னோடித் திட்டத்தில் இணங்கியுள்ளன. இல்லங்களின் 1,600க்கும் மேற்பட்ட இல்லவாசிகள் வாக்களிக்க உள்ளனர்.

இடவசதி காரணமாகத் தாதிமை இல்லங்களின் பன்னோக்கு மண்டபங்களில் வாக்குச்சாவடிகள் அமைந்திருக்கும்.

ஸ்ரீ நாராயண மிஷன் (சிங்கப்பூர்) (எஸ்என்எம்) தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.தேவேந்திரன் இது தொடர்பில் இல்லத்தின் ஏற்பாட்டைப் பற்றிப் பகிர்ந்துகொண்டுள்ளார். தற்காலிகத் தடுப்புகள், மேசைகள், நாற்காலிகள் போன்றவற்றை சொங் பாங்கின் எஸ்என்எம் தாதிமை இல்லத்தில் தயார் செய்வது குறித்து தேர்தல் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

“தாதிமை இல்லவாசிகள் வாக்குச்சாவடியை அடைந்ததும் தேர்தல் துறை அதிகாரிகள் வாக்களிப்பு தொடர்பில் உதவுவார்கள். இல்லப் பணியாளர்கள் எவ்வகையிலும் இல்லவாசிகளின் வாக்களிப்பில் தலையிட முடியாது,” என்றார் திரு தேவேந்திரன்.

குறிப்புச் சொற்கள்