தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடிமைத் தற்காப்புப் படையினருக்குப் புதிய பயிற்சி வசதிகள்

2 mins read
387f5a9b-65a9-4083-b30b-b222d6b0f3d4
குடிமைத் தற்காப்புப் பயிலகத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படையினர் சுரங்கப்பாதை பயிற்சி திறன்விளக்கக்காட்சியை அரங்கேற்றினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை அதிகாரிகள், இப்போது குடிமைத் தற்காப்புப்படை பயிலகத்தில் மிகவும் தத்ரூபமான பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.

அந்தப் பயிலகத்தின் திடல் பயிற்சிப் பகுதி ஜூலையில் அதிகாரபூர்வமாத் திறக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் மிகவும் தத்ரூபமான பயிற்சியைப் பெற்று வருகிறார்கள்.

தி எட்ஜ் என்ற அந்தப் பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளில் ‘ஒடிசி’ என்பதும் ஒன்றாகும்.

சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்படும்போது, சாலைச் சந்திப்புகளில் விபத்து நிகழும்போது, தீ விபத்துகள் நிகழும்போது, சிக்கலான உயர்மாடிக் கட்டடங்களில் இருந்து பலரையும் மீட்க வேண்டிய தேவை ஏற்படும்போது அவற்றைத் திறம்பட, வெற்றிகரமான முறையில் சமாளிக்கும் வகையில் அதிகாரிகளை ஆயத்தப்படுத்த புதிய வசதிகள் உதவுகின்றன.

ஒடிசி என்பது சுரங்கப்பாதை சாலை போன்ற பாவனை வடிவமைப்பாகும். ஆபத்தில் இருப்போரை மீட்கும் தேர்ச்சிகளை அங்கு தீயணைப்பாளர்களும் மருத்துவ அதிகாரிகளும் தத்ரூபமான சூழலில் கற்கிறார்கள்.

காலாங்- பாய லேபார் விரைவுச்சாலை போன்ற சிங்கப்பூரின் பல விரைவுச் சாலைகள் பூமிக்குக் கீழே கட்டப்பட்டு உள்ளன. ஆகையால் இத்தகைய பயிற்சி மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

இதனிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த பாய லேபார் தீயணைப்பு நிலையத்தின் தளபதி ஃபுங் கா கின், பயிற்சியாளர்களுக்கும் அவசரகால முன்களப்பணியாளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தத்ரூபமான பயிற்சி வாய்ப்பை அது வழங்குவதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தத்ரூபமான தீயணைப்பு மீட்புத் தேர்ச்சிகளை அவர்கள் பயிற்சி செய்து பார்க்க வாய்ப்பும் கிடைக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

பழைய, நொறுங்கிப்போன வாகனங்களைக் கொண்டு சாலை விபத்துக் காட்சிகள் சோடிக்கப்படும். அதில் அதிகாரிகள் பற்பல சாதனங்களைப் பயன்படுத்தி மீட்புத் திறன்களை நேரடியாகக் கற்கலாம்.

ஒடிசியின் சிறு பகுதியில் தண்ணீரில் வாகனங்கள் மூழ்கிக்கிடப்பதாக சோடித்து அதிகாரிகள் பயிற்சி பெறவும் வசதிகள் இருக்கின்றன.

அதிகாரிகள், அவசரகால சூழ்நிலைகளை வெற்றிகரமான முறையில் சமாளிக்க தேவையான ஆற்றலை, நம்பிக்கையை திறம்பட பெற்று அவற்றைத் தொடர்ந்து நிலைநாட்டி வர புதிய பயிற்சி வசதிகள் உதவுவதாக மேஜர் ஃபுங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்