ஸ்டெம் துறைகளில் பெண் ஈடுபாட்டுக்கு நவீன தீர்வுகளை எழுப்பிய ‘டிசிஎஸ் சஸ்டேய்னதான்’

3 mins read
33e7346a-6ecf-4187-bb84-4e8e4f082ba0
அதிபர் ஹலிமா யாக்கோப்புடன் வெற்றிபெற்ற ‘ஸ்டெம்பிளேசர்ஸ்’ அணியினரும் டிசிஎஸ் நிர்வாகிகளும். - படம்: டிசிஎஸ்

உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குவதில் முன்னிலையில் இருக்கும் ‘டாடா கன்சல்டன்ஸி சர்விசஸ்’ (டிசிஎஸ்) நடத்திய ‘டிசிஎஸ் சஸ்டேய்னதான்’ போட்டியில் சிங்கப்பூர் அளவில் மேல்நிலை மாணவர்கள் உள்ளடங்கிய 3 அணிகள் வெற்றிபெற்றன.

22 ஆகஸ்ட் (செவ்வாய்) நடந்த போட்டியின் சிங்கப்பூர் இறுதிச்சுற்றுக்கும் பரிசு விழாவுக்கும் சிறப்பு விருந்தினராக அதிபர் ஹலிமா யாக்கோப் வருகை புரிந்திருந்தார்.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் ‘டிஜிட்டல் ஃபார் லைஃப் - பிலே இட் ஃபார்வர்ட்’ திட்டத்துக்கு ஆதரவாக டிசிஎஸ், டெல் தொழில்நுட்பங்கள், லிங்க்டின், ஜிஎல்பி, சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து இப்போட்டியை ஏற்பாடு செய்தது.

2020ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொடங்கிய இப்போட்டி, உலகளாவிய சமுதாய, சுகாதார சவால்களைத் தொழில்நுட்பம்வழி சமாளிக்க மேல்நிலை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.

இவ்வாண்டு, “‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியில், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் பெண்வளர்ச்சிக்குத் துணைபுரிதல்” என்ற கருப்பொருளில் டெல் தொழில்நுட்பங்கள், சிட்டி, மற்றும் லிங்க்டின் ஆகிய நிறுவனங்கள் சவால் அறிக்கைகள் வெளியிட்டன.

இக்கருப்பொருளுக்கான காரணத்தை டிசிஎஸ் ஆசிய பசிபிக் தலைவர் திரு கிரீஷ் ராமச்சந்திரன் விளக்குகையில், “சிங்கப்பூரில் 35% விழுக்காட்டு பெண்களே பட்டப்படிப்பு முடித்ததும் ஸ்டெம் சார்ந்த துறைகளில் தொழில்புரிகின்றனர்.

“ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு போன்று விரைவாக வளந்துவரும் கூறுகளிலும் தலைமைத்துவ நிலைகளிலும் பெண்களை மேன்மேலும் அமர்த்துவது நம் தொழில்நுட்பத் துறைக்கு அவசியம்,” என்றார்.

‘ஸ்டெம்’ தாண்டி, சிங்கப்பூர் வேலையிடங்களில் பொதுவாகவே பெண்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதன் அவசியம் இன்றும் நிலைக்கின்றது. லிங்க்டின் தொழிலாளர் சந்தை நிலவரப்படி சிங்கப்பூரில் தலைமைத்துவ நிலைகளில் இருப்பவர்களில் 39 விழுக்காட்டினரே பெண்கள்.

இப்போட்டி ஈர்த்த 25 புத்தாக்கமிக்க முன்மொழிவுகளில் 6 அணிகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டன.

கைப்பேசிச் செயலியில் அவதாரம் தனிப்பயனாக்கம், சக பெண்களோடு பயில இணையவழி ஸ்டெம் ‘தப்பிக்கும் அறைகள்’, பெண்கள் ஸ்டெம் துறைகளில் முன்னேற வேலைவாய்ப்புகளையும் நிகழ்வுகளையும் அறிவிக்கும் இணையத்தளம், செயற்கை நுண்ணறிவுத்திறனின் துணையோடு மனிதவளப் பகுப்பாய்வு, முதலான சுவாரசியமான தீர்வுகள் அணிகளால் முன்வைக்கப்பட்டன.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியூ) மற்றும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் (எஸ்எம்யூ) மாணவர்கள் உள்ளடங்கிய ‘ஸ்டெம்பிளேசர்ஸ்’ அணி முதல் பரிசை வென்றன. அவர்களது தளம், பெண்களின் கல்விப்பயணத்தின் ஒவ்வொரு படிநிலைரயயும் ஆதரிக்கும்;

விளையாட்டு வடிவமைத்தல், ‘மெட்டாவெர்ஸ்’, மெய்நிகர், மற்றும் எதிர்காலத் தொழில்சார்ந்த பரிந்துரைகள் போன்றவற்றின்வழி ஸ்டெம் துறைகளுக்குள் ஒவ்வொரு பெண்ணையும் ஈர்க்கும்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பிரிவைச் சார்ந்த ‘சோலார்பங்க் கோ!’ என்ற அனைத்துப் பெண்கள் அணி, இரண்டாவது நிலையைப் பெற்றது. அவர்களது கைத்தொலைபேசிச் செயலி மிகை மெய்நிகர் மூலம் இளம்பெண்களுக்கு ஸ்டெம் பணிகளை சுவாரசியமாக தினசரி சொல்லிக்கொடுக்கும்; கதைசொல்லுதல், அவதாரம் தனிப்பயனாக்கம், பெண் முன்மாதிரிகள் முதலான உத்திகள்வழி பெண்களிடத்தில் ஸ்டெம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.

முதல் மூன்று அணிகள் மொத்தம் $10,000 ரொக்கப்பணத்தை வென்றன. டிசிஎஸ் ‘டிஜிட்டல் கராஜ்’ செயற்குழுவின் வழிகாட்டுதல்வழி வெற்றிபெற்ற அணிகள் தங்கள் தீர்வுகளைச் செயல்படுத்த வாய்ப்புகளையும் பெறுவர்.

‘டிசிஎஸ் சஸ்டேய்னதான்’ போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற ஆசிய பசிபிக் நாடுகளிலும், பிரிட்டன், அயர்லாந்து மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளிலும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

நவீன தீர்வுகளை எழுப்பியுள்ள இப்போட்டி, ஸ்டெம் துறைகளுக்குப் பெண்களை ஈர்ப்பதில் பல புதிய முயற்சிகளுக்கு வித்திடும் என நம்பலாம்.

குறிப்புச் சொற்கள்