மரீனா கடற்கரை விரைவுச்சாலையில் (எம்சிஇ) கனரக லாரி ஒன்றில் இருந்த பொருள்கள் உயர உச்சவரம்மை நிர்ணயிக்க அமைக்கப்பட்டிருக்கும் கூரையின்மீது மோதியதுபோல் தெரிந்தது. அதைத் தொடர்ந்து 43 வயது ஆண் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பதிவானதாகக் கருதப்படும் 10 விநாடிக் காணொளி SINGAPORE ROAD ACCIDENT ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஒரு கனரக வாகனத்தில் இருந்த பொருள்கள் சாலை கூரையை இடிப்பது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.
காணொளியில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காணப்பட்டனர்.
மரீனா கடற்கரை விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று காலை 5.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையினர் தெரிவித்தனர். ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே பகுதியை நோக்கிய விரைவுச்சாலைப் பகுதியில் விபத்து நேர்ந்தது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

