கெப்பல் பேயில் மேலும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது சடலம் இது.
24 வயது ஆடவரின் சடலம் கெப்பல் பே கடற்பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமையன்று மீட்கப்பட்டது.
அவர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் இதுகுறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. லேப்ரடோர் பூங்காவில் உதவி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
காலை 11.15 மணி அளவில் கடலில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள சிங்கப்பூர் குடியுரிமைத் தற்காப்புப் படை அழைக்கப்பட்டது.
கடலில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோது முதலில் கண்களுக்கு யாரும் தட்டுப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
அதனைத் தொடர்ந்து, ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தி அந்தக் கடலோரப் பகுதி அலசப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், லேப்ரடோர் பூங்காவிலிருந்து கிட்டத்தட்ட 3.4 மீட்டர் தூரத்தில் மரினா அருகில் உள்ள கெப்பல் பேயில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையின்படி ஆடவரின் மரணம் குறித்து சந்தேகம் எழவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று 50 வயது ஆடவரின் சடலமும் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டது. அந்த மரணம் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழவில்லை.
மரினா கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த படகில் அந்த ஆடவர் கடலோடியாக பணியாற்றிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்துவதால் அதுகுறித்து மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

