பச்சிளங்குழந்தையின் மரணம் குறித்து வெளிப்படையான தீர்ப்பு அளிக்கப்பட்டது

2 mins read
ef6484cf-c502-48ea-8880-76684a81e9a8
பிறந்த 26 நாள்களில் பெண் குழந்தை மாண்டது. - படம்: தமிழ் முரசு

பச்சிளங்குழந்தை ஒன்றின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, வெளிப்படையான தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பிறந்து வெறும் 26 நாள்களில் நூர் ஷைண்டா முகம்மது யத்திமான் எனும் அப்பெண் குழந்தை மரணம் அடைந்தது.

குழந்தையின் மரணம் குறித்த காரணம் கண்டறியப்படவில்லை.

அது சந்தேகத்துக்குரிய மரணமன்று என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

“குழந்தை தொட்டிலில் சுயநினைவின்றி கிடந்தது. அதன் மீது பொருள்கள் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மூச்சுத்திணறல் ஏற்படுத்தக்கூடிய வகையில் குழந்தை குப்புறப்படுத்த நிலையில் அதன் முகம் தொட்டிலை நோக்கி இருந்ததற்கான ஆதாரமும் இல்லை,” என்று அரசாங்க மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா தெரிவித்தார்.

இதற்கு முன்பு குழந்தை ஷைண்டாவின் அம்மாவின் இன்னொரு குழந்தையும் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டில் அவசர அறுவை சிகிச்சை மூலம் அவர் குழந்தை பெற்றெடுத்தார்.

அந்தக் குழந்தை நான்கு மாதங்களில் உயிரிழந்தது.

கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதியன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தை ஷைண்டா அழுததாகவும் அதற்குப் பால் ஊட்டியும் அது தொடர்ந்து அழுததாகவும் அதன் தந்தை தெரிவித்தார்.

குழந்தைகளை ஆறுதல் படுத்த பயன்படுத்தப்படும் உறிஞ்சியை அதன் வாயில் வைத்ததும் அது அழுகையை நிறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைக் குப்புறப்படுக்க வைத்ததாகவும் முகம் இடப்பக்கம் நோக்கி இருந்ததாகவும் குழந்தையின் தந்தை கூறினார்.

தமக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் வரவேற்பு அறைக்குச் சென்று அங்கிருந்த சொகுசு நாற்காலியில் படுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

விடிந்ததும் கண் விழித்துப் பார்த்ததாகவும் குழந்தை வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஒன்றும் போடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.

குழந்தையைத் தூக்கியபோது அது விழித்துக்கொள்ளவில்லை, அசையவும் இல்லை என்றார் அவர்.

ஆனால் மூச்சு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தாம் பதற்றம் அடைந்ததாகவும் பால் ஊட்டினால் குழந்தை விழித்துக்கொள்ளும் எனக் கருதி பால் ஊட்ட முயன்றதாகவும் அவர் கூறினார்.

ஆனால் குழந்தை விழித்துக்கொள்ளவில்லை.

உடனே ஆம்புலன்ஸை அழைத்ததாக அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி தொலைபேசி மூலம் செயல்முறை விளக்கம் கொடுக்க, குழந்தைக்கு சிபிஆர் சுவாசம் அளிக்க குழந்தையின் தந்தை முயன்றதாக அறியப்படுகிறது.

காலை 11.40 மணி அளவில் ஆம்புலன்ஸ் சிப்பந்திகள் சம்பவ இடத்தை அடைந்தனர்.

அவர்கள் குழந்தைக்கு சிபிஆர் சுவாசம் கொடுக்க முயன்றனர்.

குழந்தையின் உதடுகள் நீலம் பூத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அது மூச்சுவிட சிரமப்பட்டதுபோல் தெரிந்ததாக அவர்கள் கூறினர்.

குழந்தையின் நாடித் துடிப்பை உணர முடிவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அது மரணம் அடைந்துவிட்டதாகப் பிற்பகல் 12.40 மணியளவில் உறுதிசெய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்