தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாவது கிண்டர்லேண்ட் ஆசிரியர் கைது; பிள்ளையை அடித்ததாகச் சந்தேகம்

2 mins read
be1107a5-ec99-4cd8-8163-b31ea3db1070
இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில் ஒரு பெண், சிறுவனை அடிக்கும் காட்சி பதிவானதாகக் கருதப்படுகிறது. - படம்: நாபெல்லா காஃப் ஜாஃப் / ஃபேஸ்புக்

சுவா சு காங்கில் உள்ள கிண்டர்லேண்ட பாலர்பள்ளியில் பணியாற்றும் 48 வயது ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஓர் இளம் பையனை ஆசிரியை அடித்ததாக நம்பப்படுகிறது. அச்சம்பவம் பதிவானதாகக் கூறப்படும் காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.

அந்த 19 விநாடி காணொளி சுவா சூ காங் அவென்யூ மூன்று சன்ஷைன் பிளேசில் இருக்கும் கிண்டர்லேண்ட் பாலர்பள்ளியில் பதிவானதாகக் கூறப்படுகிறது.

நீல நிற சட்டை அணிந்திருக்கும் ஒரு பெண்ணைச் சுற்றி கையில் தண்ணீர் போத்தலை வைத்திருந்த ஒரு சிறுவன் உட்பட பல பிள்ளைகள் இருந்தது காணொளியில் தெரிந்தது. சிறுவன் போத்தலிலிருந்து அருந்தும்போது அவரின் தலையை அப்பெண் இரண்டு கைகளாலும் தள்ளிவிட்டதும் காணொளியில் தெரிந்தது.

இதன் தொடர்பில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

இது குறித்து சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னய்ன் அப்துல் ரஹிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார்.

“இதனால் தங்களின் பிள்ளைகள் பாதிக்கப்பட்டனரா என்பது தெரியாவிட்டாலும் அவர்களைப் பற்றிக் கவலை கொண்ட சில பெற்றோர் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டனர்.

“சில பிள்ளைகளுக்கு இரண்டரை வயதுதான் ஆகியிருக்கும். காணொளியில் இடம்பெற்ற அதே வகுப்பில்தான் வேறொரு பெற்றொரின் பிள்ளை படிக்கிறார். விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளிடமிருந்து நாங்கள் தகவல்களைப் பெறும் முயற்சியை மேற்கொள்வோம்,” என்றார் திரு ஸுல்கர்னய்ன் அப்துல் ரஹிம். தற்போதைய நிலையில் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை வேறு பாலர்பள்ளிக்கு மாற்றும் முயற்சியை எடுக்கலாம் அல்லது உதவி நாடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிண்டர்லேண்ட் பாலர்பள்ளியில் பயிலும் பிள்ளைகளைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு ஆசிரியையும் முன்னதாகக் கைதுசெய்யப்பட்டார். அவர் உட்லண்ட்சில் உள்ள கிண்டர்லேண்ட் பள்ளியில் பணியாற்றியவர்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து சில பெற்றோர் உட்லண்ட்ஸ் கிண்டர்லேண்ட் பாலர்பள்ளியிலிருந்து தங்களின் பிள்ளைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உட்லண்ட்ஸ் கிண்டர்லேண்ட் ஆசிரியை கைதான மறுநாள் சுவா சூ காங் கிண்டர்லேண்ட் ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரு சம்பவங்களும் பதிவானதாகக் கருதப்படும் காணொளிகளை இணையத்தில் பலர் பகிர்ந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பலர் குரல் எழுப்பினர்.

குறிப்புச் சொற்கள்