தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிள்ளையின் வாயில் நீரை ஊற்றியதாக கிண்டர்லேண்ட் ஆசிரியைமீது குற்றச்சாட்டு

2 mins read
4df9c87e-7a97-4eb4-8cd4-ecdf96e23f68
பிள்ளையை வலுக்கட்டாயமாகப் படுக்க வைத்து அவரின் வாயில் ஆசிரியை நீரை ஊற்றுவது பதிவானதாகக் கருதப்படும் காணொளியிலிருந்து ஒரு காட்சி. - படம்: ஃபேஸ்புக் காணொளிகள்.

பாலர்பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாகப் படுக்கவைத்து அவர் வாயில் நீரை ஊற்றியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கிண்டர்லேண்ட் பாலர்பள்ளி ஆசிரியைமீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

லின் மின் என்ற அந்த 33 வயது மாது புதன்கிழமையன்று ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக முன்னிலையானார். அவர் ஒரு பிள்ளையைத் துன்புறுத்தியதாக நம்பப்படுகிறது.

இவ்வாண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று பிற்பகல் நான்கு மணிக்கு சிறிது நேரத்துக்கு முன்பு அவர் அவ்வாறு செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட செயல், சிறார், இளையர் சட்டத்தின்கீழ் குற்றமாகும்.

பாதிக்கப்பட்ட பிள்ளையின் அடையாளம், சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இடம் ஆகிய விவரங்களை வெளியிட சட்டப்படி அனுமதி இல்லை.

கிண்டர்லேண்ட், சிங்கப்பூர் முழுவதும் 10க்கும் மேற்பட்ட கிளைகளை வைத்திருப்பது இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடலில் தெரியவந்தது. ஹாவ்காங், சிக்ளப், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட வட்டாரங்களில் கிண்டர்லேண்ட் கிளைகள் அமைந்துள்ளன.

ஆசிரியர் ஒருவர் பிள்ளைகளைத் துன்புறுத்துவது பதிவானதாகக் கூறப்படும் காணொளிகள் இணையத்தில் பரவுவதாக திங்கட்கிழமையன்று பிற்பகல் ஒரு மணியளவில் புகார் வந்ததென காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. புகார் கிடைத்து ஆறு மணிநேரத்துக்குள் பிள்ளைகளைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணை ஜூரோங் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

பாலர்பள்ளி ஆசிரியர் ஒருவர் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக நீர் அருந்த வைத்தது, புத்தகத்தால் பிள்ளையின் பின்புறத்தில் அடித்தது ஆகிய செயல்கள் பதிவானதாகக் கூறப்படும் காணொளிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன. சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.

மருத்துவப் பரிசோதனைக்காக லின், மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் வழக்கு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் மற்றொரு கிண்டர்லேண்ட் ஆசிரியையும் செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்டார். ஒரு சிறுவன் நீர் போத்தலிலிருந்து அருந்திக்கொண்டிருந்தபோது அந்த 48 வயது ஆசிரியை அவரின் தலையைத் தனது இரண்டு கைகளாலும் தள்ளிவிட்டதாக நம்ப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்