கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் 10 பேரில் ஒருவரான சென் ஸிங்யுவான் மீது புதன்கிழமை கூடுதலாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கம்போடிய நாட்டவரான சென், 33, வெள்ளை நிற ‘ரேஞ்ச் ரோவர்’ கார் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மூலம் அவருக்குக் கிடைத்த அனுகூலங்களில் ஒன்றாக அது விளங்குகிறது.
சென்னை மேலும் எட்டு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்க அரசு தரப்பு வழக்கறிஞர் இங் ஜின் திங் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேருக்கு இடையே தொடர்பு இருந்ததை ஆதாரம் காட்டுவதாக அவர் கூறினார். சென்னின் வழக்கறிஞர் மார்க் டான், தம் கட்சிக்காரரை பிணையில் விடுவிக்கக் கோரினார்.
“அவரது கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. அவருடைய குடும்பத்தினர் இங்கு உள்ளனர். அவர்களைக் காண அவரது மனம் ஏங்குகிறது,” என்று சொன்ன திரு டான், சென் மீண்டும் குற்றம் புரிவதற்கான சாத்தியம் குறைவு என்றார்.
செப்டம்பர் 6ஆம் தேதிவரை சென்னை தொடர்ந்து விசாரணைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் அவர் மீதான விசாரணை தொடரும்.
குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் பலனடைந்ததாக ஆகஸ்ட் 16ஆம் தேதி சென்மீது முதன்முறையாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஊழல், போதைப்பொருள் கடத்தல், கடுமையான இதர குற்றங்கள் (அனுகூலங்கள் பறிமுதல்) சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகளை அவர் தற்போது எதிர்நோக்குகிறார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் சென் உள்ளிட்ட அந்த 10 பேர் ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். அவர்களில் காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான முதல் நபராவார் சென்.
லியோனி ஹில் சாலையில் உள்ள கூட்டுரிமை வீட்டில் சென் கைது செய்யப்பட்டார். சீனா, டோமினிக்கன் நாடுகளால் வழங்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுக் கடப்பிதழ்களை சென் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு கம்போடிய நாட்டவரான சூ வென்ஸியாங் மீது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பில் புதன்கிழமை இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சிங்கப்பூரில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்க 2022ல் சூ $500,000 செலுத்தினார். குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் அவருக்கு அந்தத் தொகை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
சூவின் வழக்கறிஞர் நன்ட்வாணி மனோஜ் பிரகாஷ், தம் கட்சிக்காருக்கு பிணை வழங்கக் கோரினார். சூவின் மனைவி, பிள்ளைகள் இங்கு வசிப்பதாக திரு பிரகாஷ் கூறினார்.
சூவை தொடர்ந்து விசாரணைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலர், தீவின் பல பகுதிகளில் உள்ள ‘குட் கிளாஸ் பங்களா’க்கள், உயர் ரக கூட்டுரிமை வீடுகளில் கைது செய்யப்பட்டனர். ஏறத்தாழ 400 காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்ட அதிரடி நடவடிக்கைகளில் ஏறக்குறைய $1 பில்லியன் பெறுமானமுள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டன அல்லது அவற்றை விற்கத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

