தெம்பனிசில் சட்டவிரோதமாக மரத்தை வெட்டிச் சாய்த்த ஆடவருக்கான தேடல்

2 mins read
2030fc7c-caed-4cae-9062-92c3ce530db6
மரங்களை வெட்டிச் சாய்ப்போருக்கு அபராதம் விதிக்கப்படலாம். - படம்: தெம்பனிஸ் நகர மன்றம்

தெம்பனிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக மரத்தை வெட்டிச் சாய்த்த ஓர் ஆடவரை தெம்பனிஸ் நகர மன்றம் தேடி வருகிறது. இச்சம்பவம் தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் நிகழ்ந்தது.

இது குறித்து தகவல் தெரிந்தோர் முன்வந்து தெரியப்படுத்துமாறு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று கிரீன்டியூ எஸ்டேட் வட்டாரத்தில் அறிவிப்புகள் வைக்கப்பட்டன. கிரீன்டியூ எஸ்டேட், புதிய தேவைக்கேற்பக் கட்டப்படும் வீவக வீடுகள் அமைந்துள்ள வட்டாரம்.

செடிகொடிகளை வெட்டுவதற்காக வெட்டுக்கத்தியை வைத்திருந்த ஓர் ஆடவரின் படம் அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளது.

ஒரு மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டதாகவும் வேறு இரண்டு மரங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெம்பனிஸ் நகர மன்றம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. எனினும், மூன்று சம்பவங்களுக்கும் ஒருவர்தான் பொறுப்பா என்பதை நகர மன்றத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் உள்ள வீவக புளோக் 648Cக்கு அருகே ஒரு குடியிருப்பாளர் மரம் ஒன்றை வெட்டிச் சாய்த்ததைக் கண்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததென நகர மன்றப் பேச்சாளர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

புளோக் 648Cயின் மின்தூக்கி வளாகத்துக்கு அருகே இரண்டு மரங்கள் வெட்டப்பட்டது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது. வெட்டப்பட்ட ஒரு மரம் ஒரு பக்கமாகக் கிடந்தது.

“இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நாங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்படுகிறோம். இதற்குப் பொறுப்பானவரை அடையாளம் காண குடியிருப்பாளர்களின் உதவி கேட்டு அக்கம்பக்கத்தில் அறிவிப்புகளையும் வைத்தோம்,” என்றார் தெம்பனிஸ் நகர மன்றத்தின் பேச்சாளர்.

குறிப்புச் சொற்கள்