நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறித்து மக்கள் பரவலாகப் பேசி வந்தாலும் அதன் முழுப் பாதிப்பை கட்டுமானம், தளவாடத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள்தான் அதிகமாக அனுபவிக்கின்றனர்.
அதீத வெப்பத்தால் தங்கள் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறிப்பிட்ட திட்ட அட்டவணையில் தங்களால் பணிகளை முடிக்க முடியவில்லை எனவும் அந்நிறுவனங்கள் கூறின.
“வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் ஊழியர்கள் அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கிறது. இதனால் உற்பத்தித் திறன் குறைவதோடு, பல திட்டப்பணிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியவில்லை,” என ‘ஹின் லீ கான்ட்ரக்டர் டிரேடிங்’ நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு ஜான் டாங் தெரிவித்தார்.
மேலும், “இந்தக் காலகட்டத்தில் ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பது சற்று அதிகரித்து உள்ளது. இதனால் அதிக நேரம் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது,” எனவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் கடந்த மே 13ஆம் தேதி ஆக அதிக வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதையடுத்து, வெப்பத் தாக்கம் குறித்த தேசிய அளவிலான ஆலோசனையை அரசாங்கம் வெளியிட்டது.