கிண்டர்லேண்ட் கிளை தலைமை ஆசிரியர் பணிநீக்கம்

2 mins read
f28d9b6b-1e6d-4bb9-82e9-663ac705e84b
கிண்டர்லேண்ட் பிள்ளை துன்புறுத்தல் விவகாரம். - படங்கள்: ஃபேஸ்புக் காணொளிகளில் இடம்பெற்ற காட்சிகள்

பிள்ளை துன்புறுத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள கிண்டர்லேண்ட் பாலர்பள்ளிக் கிளை ஒன்றின் தலைமை ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறார் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கிண்டர்லேண்ட் பாலர்பள்ளி கிளை ஒன்றின் தலைமை ஆசிரியராக இருந்த திருவாட்டி மஹிரா யாசிட், புதன்கிழமை முதல் மற்ற பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாக கிண்டர்லேண்ட் சிங்கப்பூரின் பொது நிர்வாகி திரு சீட் லீ கியாங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

கிண்டர்லேண்ட் ஆசிரியை ஒருவர் அங்கு பயிலும் பிள்ளைகளைத் துன்புறுத்தியது பதிவானதாகக் கூறப்படும் காணொளிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன. அதைத் தொடர்ந்து திருவாட்டி மஹிரா பணிநீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் பாலர்கல்வித் துறையில் பணியாற்ற அவருக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் புதன்கிழமையன்று சில பெற்றோர் குரல் கொடுத்தனர்.

சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒரு கலந்துரையாடலை நடத்த கிண்டர்லேண்ட் திட்டமிட்டுள்ளது. கிண்டர்லேண்ட் மாணவர்களின் பெற்றோர் அனைவரும் அதில் பங்கேற்கலாம் என்று ஊடகத் துறையினருடன் நடைபெற்ற நேர்காணலில் திரு சீட் தெரிவித்தார்.

பிள்ளை துன்புறுத்தல் விவகாரம் தலைதூக்கிய பிறகு முதன்முறையாக திரு சீட் ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.

துன்புறுத்தல் சம்பவம் குறித்து முதன்முறையாக ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதியன்று தனக்குத் தெரிய வந்ததென அவர் கூறினார். இதுபற்றி அன்றுதான் பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) கிண்டர்லேண்டைத் தொடர்புகொண்டது.

ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பு விசாரணையைத் தொடங்கியது. ஆகஸ்ட் 28ஆம் தேதியன்றுதான் கிண்டர்லேண்ட் நிர்வாகம் சம்பந்தப்பட்ட காணொளிகளைப் பார்த்ததாகவும் திரு சீட் தெரிவித்தார். அன்றுதான் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டன.

“விசாரணை தொடங்கியவுடன் திருவாட்டி யாசிட் அந்த மூன்று காணொளிகளையும் பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தில் முழுமையாகப் பார்த்தார். ஓர் ஆசிரியர் பிள்ளைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டுவது, அவர்களை அடிப்பது போன்ற செயல்கள் காணொளிகளில் இடம்பெற்றதாக ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று அமைப்பின் தலைமையகத்தில் அவர் கூறியிருக்கிறார்,” என்றார் திரு சீட்.

மறுநாள் கிண்டர்லேண்ட் ஒழுங்குமுறை விசாரணையைத் தொடங்கியதாக திரு சீட் குறிப்பிட்டார். முதற்கட்ட விசாரணை முடிவுகளைக் கருத்தில்கொண்டு கிண்டர்லேண்ட் ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று லின் மின் எனும் அப்பள்ளியின் 33 வயது ஆசிரியைக்கு எச்சரிக்கை கடிதம் கொடுத்தது. விசாரணை நிறைவடைந்தவுடன் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஒரு பிள்ளையைத் துன்புறுத்தியதாக செவ்வாய்க்கிழமையன்று லின்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்