சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனைத்து பாலர்பள்ளிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்று பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்க சார்புடைய ஆரம்பகால தலையீடு நிலையங்களுக்கும் இது பொருந்தும்.
கிண்டர்லேண்ட் பாலர்பள்ளிக் கிளைகளில் பிள்ளைகள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்த சர்ச்சை விசாரணை நடத்தப்பட்டுவரும் வேளையில் வியாழக்கிழமையன்று இந்த அறிவிப்பு வந்தது.
பாலர்கல்வித் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அடிக்கடி பரிசீலனை செய்யப்படும்; அதன் ஓர் அங்கமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. பெற்றோர், ஆசிரியர்கள், பாலர்பள்ளிகளை நடத்துவோர் ஆகியோரின் கருத்துகளைக் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.
2022ஆம் ஆண்டிலிருந்து பாலர்கல்வித் துறையுடன் தொடர்பில் இருப்பதாக பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்குவதற்கான திட்டம் குறித்து பிப்ரவரி மாதம் பாலர்பள்ளிகளிடம் தெரியப்படுத்தப்பட்டதாக அமைப்பு சொன்னது.
பாலர்பள்ளி ஊழியர்கள், சிறுவர்கள் ஆகியோரின் அந்தரங்கம் பாதிக்கப்படாமல் இருக்க கழிவறைகள், ஆடை மாற்றுவதற்கான அறைகள் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படமாட்டா என்று பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு குறிப்பிட்டது. இந்நடவடிக்கை தொடர்பிலான வழிமுறைகளை அமைப்பு வெள்ளிக்கிழமையன்று பாலர்பள்ளிகளுடன் பகிர்ந்துகொள்ளும்.
60 விழுக்காட்டு பாலர்பள்ளிகளிலும் எல்லா ஆரம்பகால தலையீட்டு நிலையங்களிலும் ஏற்கெனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.
“சந்தேகத்துக்குரிய அல்லது அனுமதி இல்லாத நபர்கள் நுழைவதைத் தடுக்க பாலர்பள்ளி பாதுகாப்பு கேமராக்கள் உதவும்,” என்று அமைப்பு கூறியது.
“சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் விசாரணை மேற்கொள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காணொளிகள் நம்பத்தகுந்த ஆதாரமாக இருக்கும். கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது, பாலர்பள்ளிகளில் பாதுகாப்பான, நிலையான சூழலை ஏற்படுத்தித்தர ஏற்கெனவே நடப்பில் இருக்கும் செயல்முறைகளுக்குக் கூடுதல் வலுச்சேர்க்கும்.
தொடர்புடைய செய்திகள்
“இதனால் பெற்றோரும் ஆசிரியர்களும் கூடுதல் நிம்மதியுடன் இருக்கலாம்,” என்று அமைப்பு சொன்னது.

