தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தர்மன்: எனக்கே வியப்பளித்த வெற்றி

2 mins read
fec74640-3fbc-423e-93df-19329c490b4a
தோ பாயோ ஹப் மையத்தில் திரு தர்மன். - படம்: பெரித்தா ஹரியான்

அதிபர் தேர்தலில் இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பது தமக்கே வியப்பளிப்பதாக சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகப் பதவியேற்க இருக்கும் திரு தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

தம்மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஐக்கியமாக வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கை பொய்க்காமல் மேலும் திறம்படச் செயலாற்ற வேண்டும் என்பதை முக்கியமாகக் கருதுவதாக அவர் கூறினார்.

இது நம்பிக்கை தரும் வருங்காலத்துக்கும் ஒற்றுமைக்காகவும் அளிக்கப்பட்ட வாக்குகள் என்றார் அவர்.

66 வயது தர்மன் 70.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் 15.72 விழுக்காடு வாக்குகளையும் டான் கின் லியான் 13.88 விழுக்காடு வாக்குகளையும் பெற்றனர்.

தேர்தல் முடிவுகள் இப்படி அமைந்தது சிங்கப்பூருக்கு மிகவும் நல்லது என்றும் வாக்காளர்களிடையே இத்தகைய ஒற்றுமை இருக்கும் என்பதைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சில உணவங்காடிகளுக்குச் சென்றபோது மக்கள் பலர் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். நானும் அவர்களுக்கு வாழ்த்து கூறினேன்,” என்று தோ பாயோ ஹப் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னார். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு சனிக்கிழமையன்று திரு தர்மன் பல்வேறு இடங்களுக்குச் சென்றார்.

தேர்தலில் தமக்குக் கிடைத்த மகத்தான வெற்றியைப் பற்றிப் பேசிய திரு தர்மன், “நம்பிக்கை, நம்பிக்கை தரும் எதிர்காலம், புதிய வழிகளிலும் ஒன்றுபட்டு செயல்படும் எண்ணம் ஆகியவற்றைச் சித்திரிக்கும் வண்ணமே தேர்தல் முடிவுகள் உள்ளதாக உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

சிங்கப்பூர் உருவெடுத்து[Ϟ]வரும் முறையைக் கருத்தில்கொள்ளும்போது இந்த அதிபர் தேர்தல் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இத்தேர்தலில் இன அடிப்படையில் மட்டும் போட்டி அமையவில்லை என்பதை எடுத்துக்காட்டிய அவர், எந்தத் தரப்பையும் சார்ந்திராத ஓர் அதிபரை மக்கள் விரும்புவதையே முடிவுகள் காண்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமது பல ஆண்டுகால அரசியல் அனுபவத்தை வாக்காளர்கள் குறையாகக் கருதவில்லை என்பதையும் அதை வைத்து அவர்கள் தம்மைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டியதாக திரு தர்மன் சொன்னார்.

தமக்கு வாக்களிக்காதோரைப் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்களுக்கும் தம்மால் முடிந்தவரை சேவையாற்றப்போவதாக திரு தர்மன் கூறினார்.

“இத்தனை பேர் என்னைத் தேர்ந்தெடுப்பர் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படியென்றால் பொதுவாக ஆளும் கட்சிக்கு வாக்களிக்காத பலர் இதை ஓர் அரசியல் சம்பந்தப்பட்ட தேர்தலாகப் பார்க்கவில்லை என்று அர்த்தமாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிபராக தேர்வு பெற்றுள்ள திரு தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியாரும் சனிக்கிழமை தெம்பனிஸ் ஹப் மையத்தில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அதிபராக தேர்வு பெற்றுள்ள திரு தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியாரும் சனிக்கிழமை தெம்பனிஸ் ஹப் மையத்தில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்