சிங்கப்பூர் முன்னெடுக்கும் வருமுன் காக்கும் சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்துக்கு உந்துதல் கிடைத்துள்ளது. நீண்ட ஆயுளுடன் வாழ உதவி புரியும் சுகாதார வசதி அலெக்சாண்டிரா மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரக் கழகத்தில் இதுபோன்ற ஒரு வசதி அமைவது உலகிலேயே இதுவே முதன்முறை.
நலமாக இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் உடல்நலத்துடன் வாழ உதவ, அவர்களுக்கேற்ற சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்களை இந்த மருந்தகம் வழங்கும். தேவைப்பட்டால் சிறப்புப் பராமரிப்பையும் அவர்கள் இங்கு பெறலாம்.
மருந்தகத்தின் தொடக்க நிகழ்வில் பேசிய சுகாதார அமைச்சின் சுகாதாரச் சேவை தலைமை இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக், வளர்ச்சி அடைந்த பிற நாடுகளைப்போல மூப்படைதல் தொடர்பிலான சவால்களிலும் நீண்ட ஆயுளுடன் வாழ உதவி புரியும் மருத்துவத் துறையில் முதலீடு செய்வதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
“இந்த அம்சம் குறித்து எதையாவது செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தீர்மானமாக உள்ளோம். அத்தகைய முயற்சிகளில் ஒன்றே இந்த மருந்தகம்,” என்றார் அவர்.
இந்த மருந்தகத்தில் ஒருவர் மூப்படையும் வேகத்தைக் கணிக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். மூப்படைதலை மெதுவடையச் செய்ய உதவும் தனிப்பட்ட சுகாதாரத் திட்டங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவர் எத்தனை ஆண்டுகாலம் வாழ்கிறார் என்பதைவிட அவர் மூப்படையும் வேகத்தைக் கணிக்கும் முறையே ஆரோக்கியத்தின் சிறந்த அளவுகோலாக உள்ளது.
மரபணு தொடர்பான அம்சம் மட்டுமன்றி உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம், ரத்த சர்க்கரை அளவு போன்றவை ஒருவர் மூப்படைவதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சிங்கப்பூரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர் என்று சொன்ன பேராசிரியர் மாக், ஒருவரின் ஆயுட்காலத்துக்கும் அவர் உடல்நலத்துடன் வாழ்ந்த காலத்துக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து 10 முதல் 11 ஆண்டுகளாக இருப்பதாகக் கூறினார்.
“அந்த இடைவெளியைக் குறைக்க நாங்கள் விரும்புகிறோம். அப்போதுதான் முதுமையில் உடல்நலம் குன்றிய காலம் குறையும்,” என்றார் அவர்.
நிலையான ஒரு நாட்பட்ட நோய் உடைய, 35 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்குப் பல்வேறு பரிசோதனைகளுக்காக இந்த மருந்தகம் $1,500 முதல் $3,000 வரை கட்டணம் விதிக்கிறது.
“அரசாங்க உதவி வழங்கும் நிலையை இது இன்னும் நெருங்கவில்லை. எனினும், அதை நோக்கி நாங்கள் செயலாற்றி வருகிறோம். பொதுச் சுகாதாரக் கழகத்தில் மட்டுமே இது சாத்தியமாகும்,” என்றார் மருந்தக இயக்குநரும் இதய மருத்துவரான டாக்டர் லாரின் வாங்.


